உலகக்கோப்பை அணி தேர்வு விவகாரம்: தமிம் இக்பால் மீது ஷகிப் அல்-ஹசன் சாடல்

டாக்கா,

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வங்காளதேச அணியில் தொடக்க ஆட்டக்காரரும், முன்னாள் கேப்டனுமான தமிம் இக்பால் திடீரென நீக்கப்பட்டார். அவ்வப்போது முதுகுவலியால் அவதிப்பட்ட அவருக்கு உடல் தகுதி பிரச்சினையால் இடம் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. இதற்கிடையே, தமிம் இக்பால் வங்காளதேச கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக விமர்சித்தார்.

‘முதுகு வலி இருப்பது உண்மை தான். ஆனால் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக முழு உடல்தகுதியை எட்டிவிடுவேன் என்று என்னை தொடர்பு கொண்டு பேசிய வங்காளதேச கிரிக்கெட் வாரிய நிர்வாகியிடம் கூறினேன். அதற்கு அந்த நிர்வாகி, நீங்கள் முதல் போட்டியில் இடம் பெற்றாலும் பின்வரிசையில் தான் விளையாட வேண்டி இருக்கும் என்று சொன்னார்.

நான் 17 ஆண்டுகளாக தொடக்க ஆட்டக்காராக மட்டுமே விளையாடி வருகிறேன். வேறு எந்த வரிசையிலும் விளையாடியதில்லை. மிடில் வரிசையில் அனுபவம் இல்லை. அவர் இவ்வாறு கூறியதும் அதிர்ச்சி அடைந்தேன். இது போன்ற எண்ணங்கள் இருந்தால் உலகக் கோப்பை போட்டிக்கு என்னை அனுப்பாதீர்கள். ஒவ்வொரு நாளும் புதுப்புது கட்டுப்பாடுகள் போடுவதை நான் விரும்பவில்லை. என்று அவரிடம் கூறினேன்’ என்றார்.

இந்த நிலையில் அவருக்கு வங்காளதேச அணியின் கேப்டன் ஷகிப் அல்-ஹசன் பதிலடி கொடுத்துள்ளார். ஷகிப் கூறுகையில், ‘வங்காளதேச நிர்வாகி, தமிம் இக்பாலிடம் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது. உதாரணமாக இந்திய வீரர் ரோகித் சர்மாவை பாருங்கள். பேட்டிங்கில் 7-வது வரிசையில் இருந்து தொடங்கி தொடக்க வீரர் இடத்துக்கு உயர்ந்து 10 ஆயிரம் ரன்னுக்கு மேல் குவித்துள்ளார்.

ஒரு வீரர் எந்த வரிசையில் விளையாடவும் தயாராக இருக்க வேண்டும். அணியின் நலனே முதலில் முக்கியம். நீங்கள் அணிக்குரிய வீரராக இருக்க வேண்டும். 100 அல்லது 200 ரன் விளாசி அணி தோற்றால் அதனால் என்ன பயன்? உங்களது தனிப்பட்ட சாதனையை வைத்து என்ன செய்ய முடியும்? தமிம் இக்பாலின் செயல் முற்றிலும் சிறுபிள்ளைத்தனமானது. டோனி ஒரு முறை, முழு உடல்தகுதியுடன் இல்லாமல் விளையாடுவது அணிக்கு இழைக்கும் துரோகம் என்று கூறினார். இதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நமது தேதசத்துக்காக விளையாடும் போது காயமின்றி 100 சதவீதம் உடல்தகுதியுடன் இருக்க வேண்டும்’ என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.