அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 20-வது துடிப்பான குஜராத் சர்வதேச மாநாடு நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நாட்டின் வளர்ச்சி இன்ஜினாக குஜராத்தை மாற்ற துடிப்பான குஜராத் சர்வதேச மாநாடு 2003-ல் தொடங்கப்பட்டது.
அதன் பிறகுதான் ஆயிரக்கணக்கான வெற்றிக் கதைகள் உருவாகி உள்ளன. கடந்த நூற்றாண்டில் குஜராத் வர்த்தகர்கள் நிறைந்த மாநிலமாக விளங்கியது. இப்போது தொழில்
உற்பத்தி முனையமாக உருவெடுத்துள்ளதால் குஜராத்துக்கு புதிய அடையாளம் கிடைத்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில், வாகன உற்பத்தித் துறை முதலீடு 9 மடங்கு அதிகரித்துள்ளது. நமது தொழிற்சாலை உற்பத்தி 12 மடங்கு அதிகரித்துள்ளது. இம்மாநிலத்தின் ரசாயன உற்பத்தி துறை உலகம் முழுவதும் புகழ்ப்பெற்று விளங்குகிறது. குஜராத்தில் தயாரிக்கப்படும் சாயங்கள் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 75% பங்கு வகிக்கிறது.
இங்கு 30 ஆயிரம் உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இங்கிருந்து வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மருந்து உற்பத்தித் துறையும் வளர்ச்சி அடைந்துள்ளது. நாட்டின் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தியில் 50%, இருதய ஸ்டென்ட் உற்பத்தியில் 80% குஜராத் பங்கு வகிக்கிறது.
நாட்டில் விற்பனையாகும் வைர நகைகளில் 70% குஜராத்தில் தயாரானவை. மேலும் நாட்டின் வைர நகைகள் ஏற்றுமதியில் இம்மாநிலத்தின் பங்கு 80% ஆக உள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ.16,600 கோடி வைர நகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
வரும் 2047-ம் ஆண்டு 100-வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். அதற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றவும் சுயசார்பு இந்தியாவாக மாற்றவும் இந்த மாநாட்டை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும். இப்போது உலகில் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது. உலக
ளாவிய பொருளாதார சக்தியாக இந்தியா மாற உள்ளது. உலகின் முதல் 3 பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா விரைவில் இடம் பிடிக்கும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.