சென்னை: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு தமிழகம், தெலங்கானா ஆளுநர்கள், முதல்வர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: பசுமைப்புரட்சியின் தந்தையும், நவீன பாரதத்தைக் கட்டமைத்தவருமான டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். அவர் எப்போதும் நம் இதயங்களிலும், மனதிலும் வாழ்வார். துயர்மிகு இந்நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடன் இருக்கும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: பசிப்பிணி ஒழிப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு என்றஇரு குறிக்கோள்களுக்காக அரும்பணியாற்றியவர் வேளாண் அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதன். அவரது மறைவு செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன். நாடு போற்றும் விஞ்ஞானியாக, சுற்றுச்சூழல்-வேளாண்மைத் துறையில் அளப்பரிய பங்கை ஆற்றியுள்ளார். 2021-ல்அவரை நூறாண்டு வாழ்க என வாழ்த்தியது, தற்போதும் என் நெஞ்சில் நிழலாடுகிறது. அவரது இழப்பு அறிவியல் துறைக்கும், தமிழ்நாட்டுக்கும் ஈடு செய்ய இயலாதபேரிழப்பாகும்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்றழைக்கப்படும் எம்.எஸ்.சுவாமிநாதனின் மறைவால் மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்: விஞ்ஞானிசுவாமிநாதன் 1970-களில் இந்தியாவைஅரிசி மற்றும் கோதுமையில் தன்னிறைவுஅடையச்செய்தவர். ஊக்கமளிக்கும் தலைவராகவும், உத்வேகமளிக்கும் ஆசிரியராகவும் இருந்தவர். அவரால்தான் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1972-ல்வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையை உருவாக்கினார்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் ஏ.கே.சிங்: பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதனின் மறைவு, புதுமைகள் நிறைந்த விவசாய ஆராய்ச்சி, கல்வி மற்றும் விரிவாக்கத்தின் சகாப்தத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. மகாத்மா காந்தி சொன்னதுபோல, ஏழைகளுக்கும், பசித்தவர்களுக்கும் கடவுள் ரொட்டி வடிவில் தோன்றுவார். எனவே, ஒவ்வொரு குடிமகனும் தினமும் உணவு உட்கொள்ளும்போது வணங்க வேண்டிய கடவுள் சுவாமிநாதன்தான்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: பசுமைப் புரட்சியின் தந்தை என்று போற்றப்பட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமான செய்தி அறிந்து வருத்தமுற்றேன். முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பேரன்பை பெற்றவர் அவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: விவசாயத் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் எம்.எஸ்.சுவாமிநாதன். பஞ்சம், பற்றாக்குறை என்ற வார்த்தைகளே இருக்கக்கூடாது என்பதற்காக பாடுபட்டவர். அவரது இழப்பு விவசாயிகளுக்குப் பேரிழப்பாகும்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்ற பெருமைக்கு உரியவரும்,சர்வதேச அளவில் பல விருதுகளைப்பெற்றவருமான எம்.எஸ்.சுவாமிநாதன்மறைவு செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: பசுமைப் புரட்சி நிகழ்த்தி, நாட்டில் உணவுப் பஞ்சத்தை போக்க பெரும் துணையாக இருந்த விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் மறைவு மிகுந்த வேதனை தருகிறது. நாட்டில் விவசாய உற்பத்தியை பெருக்குவதற்காக தனது வாழ்நாளில் பெரும்பகுதியை செலவழித்தவர். அவரது மறைவு வேளாண் துறைக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: 1960-ல் உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது, ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரககோதுமையை இந்தியாவில் அறிமுகம்செய்து, அதன் மூலம் அதிக உற்பத்தியையும், லாபத்தையும் ஏற்படுத்தி சாதித்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன். அவரது மறைவு நாட்டுக்கே பேரிழப்பாகும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: உலகப் புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமான செய்தியறிந்து வேதனையுற்றேன். நாடு எதிர்கொண்ட கடும் உணவுப் பஞ்சத்தை சமாளிக்க, பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர். அவரது மறைவால் விவசாய ஆராய்ச்சி உலகம் சிறந்த வழிகாட்டியை இழந்து விட்டது.
பாமக தலைவர் அன்புமணி: உணவுக்காக வெளிநாடுகளில் இருந்து தானிய இறக்குமதியை நம்பியிருந்த இந்தியா, இன்று உலகில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யும் நாடாகவளர்ந்திருப்பதற்கு முக்கியக் காரணம் எம்.எஸ்.சுவாமிநாதன். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: இன்றுவிவசாயத்தில் பல்வேறு வளர்ச்சியைக் கண்டுள்ளோம் என்றால், அதற்கு அடித்தளமிட்டவர் எம்.எஸ்.சுவாமிநாதன். விவசாய வளர்ச்சிக்கு புதிய பாதையை உண்டாக்கி, புதுயுக்திகளைக் கையாண்டவர். அவரது இழப்பு விவசாயிகளுக்கும், நாட்டுக்கும் பேரிழப்பாகும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமான செய்தி மிகுந்த துயரம்தருகிறது. நாட்டின் உணவுப் பாதுகாப்பைஉறுதி செய்வதில் அளப்பறிய பங்களிப்பை செலுத்தியவர். அவரது இழப்பால் வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.
விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன்: வேளாண் புரட்சியை உருவாக்கிய எம்.எஸ்.சுவாமிநாதன், 140 கோடி மக்களின்உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், தொலைநோக்குப் பார்வையுடன் திட்டமிட்டு, உணவு உற்பத்தியில் இந்தியாவில் தன்னிறைவை ஏற்படுத்தி வெற்றி கண்டவர். அவரது மறைவு இந்திய விவசாயிகளுக்கு பேரிழப்பாகும்.
அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி: உலகின் சிறந்த வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதனின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. பசுமை உலகில் அவரது புகழ் நிலைத்திருக்கும். பசுமைப் புரட்சியின் தந்தையாக விளங்கிய எம்.எஸ் சுவாமிநாதனுக்கு, இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பிக்க வேண்டும்.
இதேபோல, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், வி.கே.சசிகலா, தமிழக காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர்கு.செல்வப்பெருந்தகை உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.