திருவனந்தபுரம்,
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் 10 நகரங்களில் அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை நடக்கிறது. இந்த சூழலில் நாளை ஆப்கானிஸ்தான் அணியுடன் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடுகிறது.
சமீபத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரை வென்ற புதுதெம்புடன் தென் ஆப்பிரிக்கா அணி இந்த உலகக்கோப்பையை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் ஒருநாள் உலகக் கோப்பையை தென்ஆப்பிரிக்க அணியால் வெல்ல முடியும் என்று அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளார் ககிசோ ரபாடா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், “தென் ஆப்பிரிக்க வீரர்களின் நம்பிக்கை என்றுமே குறைந்ததில்லை. இந்த உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. உலகக் கோப்பையை வெல்லும் திறன் கொண்ட வீரர்கள் எங்களிடம் இருக்கிறார்கள்.
உலகக் கோப்பையில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி கோப்பையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த உலகக் கோப்பை சவாலானதாக இருக்கப் போகிறது. ஆனால், போட்டிகள் உண்மையில் உற்சாகத்தை ஏற்படுத்தும் விதமாக அமையப் போகிறது.
உலகக் கோப்பையில் இதுவரை அரையிறுதி சுற்றுவரை மட்டுமே தென் ஆப்பிரிக்கா முன்னேறி உள்ளது. ஆனால், இந்த முறை அந்த வரலாற்றை தங்கள் அணி நிச்சயம் மாற்றும். சாம்பியன் பட்டமும் வெல்வோம் என நம்புகிறோம். இது கொஞ்சம் கடினம்தான். அதே நேரத்தில் சிறப்பான அனுபவமாகவும் இருக்கும். உலகின் சிறந்த அணி மற்றும் சிறந்த வீரர்களுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ள நாங்கள் தயார். தனி நபராக உலகக் கோப்பையை வெல்ல முடியாது. அணியின் ஒருங்கிணைப்பு அவசியம்” என்று அவர் தெரிவித்தார்.