காவிரி ஆணையம், சுப்ரீம் கோர்ட்டில் இன்று கர்நாடகம் புதிய மனு தாக்கல்; முதல்-மந்திரி சித்தராமையா அறிவிப்பு

பெங்களூரு:

காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு மேலும் 18 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீரை திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. தங்களிடம் நீர் இல்லை என்று கர்நாடகம் கூறியுள்ளது. இந்த நிலையில் காவிரி நீர் விவகாரத்தில் அடுத்தக்கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் சட்ட நிபுணர்கள் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது.

இதில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள், சட்ட நிபுணர்கள், முன்னாள் அட்வகேட் ஜெனரல்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி இன்று (நேற்று) உத்தரவிட்டுள்ளது. ஆனால் எங்களிடம் போதிய நீர் இல்லை. தற்போது அணைகளில் உள்ள நீர் எங்களின் குடிநீர், பாசன தேவைக்கே போதாது. இந்த சூழ்நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க இயலாத நிலையில் கர்நாடகம் உள்ளது.

அடுத்தக்கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள், சட்ட நிபுணர்கள், முன்னாள் அட்வகேட் ஜெனரல்களுடன் கலந்து ஆலோசனை நடத்தினேன். அவர்களின் ஆலோசனைகளை பெற்றுள்ளேன். அதன்படி காவிரி மேலாண்மை ஆணையம் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி பிறப்பித்துள்ள உத்தரவை மறுபரிசீலனை செய்ய கோரி அதே ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்கிறோம்.

மேலும் அந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் நாளை (இன்று) புதிய மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளோம். இந்த மனு விசாரணையின்போது கர்நாடகம் எதிர்கொண்டு வரும் தண்ணீர் பிரச்சினை குறித்து விரிவாக எடுத்துக் கூறுவோம். எங்களுக்கு நியாயம் வழங்குமாறு கேட்போம். மேகதாது திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்குமாறும் கோரி மனு தாக்கல் செய்கிறோம். இந்த திட்டத்தால் நீர் மின்சார உற்பத்தியும் மேற்கொள்ள முடியும். தமிழகத்திற்கு தேவைப்படும்போது நீர் திறந்துவிட வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.