நேற்று, கர்நாடகா பெங்களூரில் சித்தார்த் நடிப்பில் வெளியாகியுள்ள `சித்தா’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் காவிரி பிரச்னையை காரணம் காட்டி நடிகர் சித்தார்த்தைப் பேசவிடாமல் வெளியேற்றிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிகழ்ச்சி நடந்த அரங்கில் நுழைந்த சிலர், சித்தார்த்தைப் பேசவிடாமல் தடுத்து, “காவிரி நீர் தமிழகத்திற்குச் செல்கிறது. இதைக் கண்டித்து நாங்கள் இங்குப் போராடுகிறோம். ஆனால், நீங்கள் இங்குத் தமிழ்ப் படத்தை புரொமோஷன் செய்து நிகழ்ச்சி நடத்துகிறீர்கள்…” என்று ஆவேசத்துடன் கூச்சலிட்டு நிகழ்ச்சியை நடக்கவிடாமல் இடைநிறுத்தினர்.
மேலும், சித்தார்த்தைப் பேசவிடாமல் அங்கிருந்து வெளியேறும்படி செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று முதல் வைரலாகி வருகிறது. இது குறித்து பலரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த நடிகர் பிரகாஷ் ராஜ், “பல ஆண்டுகளாக நீண்டுகொண்டிருக்கும் இப்பிரச்னைக்குத் தீர்வுகாணாமல் தோல்வியடைந்த அரசியல்வாதிகளிடம் கேள்வி கேட்க வேண்டும். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத பயனற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேள்வி கேட்க வேண்டும். அதைவிட்டுவிட்டு மக்களுக்கும், சினிமா கலைஞர்களுக்கும் இப்படி நெருக்கடிகளைக் கொடுத்து தொந்தரவு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு கன்னடனாகவும், கன்னடர்கள் சார்பாகவும் இதற்கு நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.