கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பிஎம் கதி சக்தி திட்டத்தின் கீழ் ரூ.52,000 கோடியில் 6 திட்டங்கள்: மத்திய அரசுக்கு பரிந்துரை

புதுடெல்லி: பிஎம் கதி சக்தி திட்டத்தின்கீழ் கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ரூ.52,000 கோடியில் 6 திட்டங்களை செயல்படுத்த பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டில் பிஎம் கதி சக்தி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதன்படி நாட்டின் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கதி சக்தி திட்டக் குழுவின் 56-வதுகூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கதி சக்தியின் கீழ் ரூ.52,000 கோடியில் 6 திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

முதலாவது திட்டத்தின்படி குஜராத் – மகாராஷ்டிரா இடையே புதிதாக பசுமை வழிச் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி இரு மாநிலங்கள் இடையே 290 கி.மீ. தொலைவுக்கு 6 வழிச் சாலை அமைக்கப்பட உள்ளது. இதில் 3 ரயில்வே மேம்பாலங்கள், 16 மேம்பாலங்கள், 130 சிறிய பாலங்கள், 430 சிறிய சுரங்கப் பாதைகள் உள்ளிட்டவை கட்டப்படும். சாலையின் திட்ட மதிப்பு ரூ.13,000 கோடி.

இந்த பசுமை வழி சாலை திட்டத்தால் குஜராத்தின் நவ்சாரி, மகாராஷ்டிராவின் நாசிக், அகமதுநகர் மாவட்டங்களில் செயல்படும் தொழிற்பேட்டைகள் அபார வளர்ச்சி அடையும். அதோடு குஜராத்தின் நவ்சாரி, வல்சாத் மற்றும் மகாராஷ்டிராவின் நாசிக் பகுதிகளில் வசிக்கும் பழங்குடி மக்களின் வேளாண் சாகுபடி விற்பனை அதிகரிக்கும். பசுமை வழி சாலை திட்டத்தால் குஜராத், மகாராஷ்டிராவில் தொழில், வேளாண் துறை அதிவேகமாக வளர்ச்சி அடையும்.

குஜராத் பசுமை சாலை: இரண்டாவது திட்டத்தின்படி குஜராத் மாநிலத்தின் பனாஸ் கந்தா, பதான், மெக்சனா, காந்தி நகர், அகமதாபாத் ஆகிய 5 மாவட்டங்களை இணைக்கும் வகையில் புதிதாக பசுமை வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இது 214 கி.மீ. தொலைவுக்கு 6 வழிச் சாலையாக அமைக்கப்படும். பின்னர் இந்த சாலையை 8 வழிச் சாலையாகவும் விரிவுபடுத்தி கொள்ள முடியும்.

அமிர்தசரஸ் – சந்தல்பூர் வர்த்தக வழித்தடம், வடோதரா- மும்பைஎக்ஸ்பிரஸ் சாலை ஆகியவற்றுடன் புதிய பசுமை வழிச் சாலை இணைக்கப்படும். இதன்மூலம் குஜராத்தின் தொழில், வேளாண், சுற்றுலா துறைகள் அபார வளர்ச்சி அடையும்.

மூன்றாவது திட்டத்தின்படி பிஹார் தலைநகர் பாட்னா – அர்ரா – சசாராம் நகரங்களை இணைக்கும் வகையில் 4 வழி விரைவுச் சாலை அமைக்கப்பட உள்ளது. 118 கி.மீ.தொலைவு கொண்ட இந்த சாலை, நக்சல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடந்து செல்லும். புதிய விரைவு சாலையால் இப்பகுதி பழங்குடி மக்கள் பெரிதும் பயனடைவார்கள்.

மேலும் பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் சாலையுடன் பாட்னா – அர்ரா – சசாராம் விரைவுச் சாலைக்கு இணைப்பு ஏற்படுத்தப்படும். இதன்மூலம் பிஹாரில் இருந்து வாரணாசி, பிரயாக்ராஜ், லக்னோ, டெல்லி, கொல்கத்தாவுக்கு செல்வதற்கான பயண நேரம் குறையும்.

நான்காவது திட்டத்தின்படி மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய 4 மாநிலங்களை இணைக்கும் வகையில் சாலை வசதியை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஐந்தாவது திட்டத்தின்படி ஒடிசாவின் கன்ஜம், நயாகர், கந்தமால், பவுது, சம்பல்பூர், அங்குல் மாவட்டங்களை இணைக்கும் வகையில் பசுமைவழி ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இந்த ரயில் வழித்தடம் மேற்கு ஒடிசாவின் தொழிற்பேட்டைகள், கனிமசுரங்கங்களை கிழக்கு கடற்கரை பகுதி துறைமுகத்துடன் இணைக்கும்.

6-வது திட்டத்தின்படி கேரளாவின் துறவூர், அம்பலப்புழா இடையிலான ரயில் வழித்தடம் இரட்டைவழி பாதையாக மாற்றப்பட உள்ளது. ரூ.1,262 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.