புதுடெல்லி: சாலை கட்டுமானத்தில் நகராட்சி கழிவுகளை பயன்படுத்துவதற்கான கொள்கையை இறுதி செய்து வருவதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
இதுகுறித்து அமைச்சர் நிதின்கட்சி நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சாலை கட்டுமானத்தில் நகராட்சி கழிவுகளை பயன்படுத்துவதற்கான கொள்கையை நாங்கள் இறுதி செய்கிறோம்.கட்டுமான சாதனங்கள் உற்பத்தியில் புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்தாத நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
வாகனப் போக்குவரத்தில் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க பல்வேறு முயற்சிகளை எங்கள் அமைச்சகம் எடுத்து வருகிறது. டெல்லி மற்றும் ஜெய்ப்பூர் இடையே எலெக்ட்ரிக் நெடுஞ்சாலை அமைக்க திட்டமிட்டு வருகிறது.
ரயில்கள் மின்சாரத்தில் இயக்கப்படுவது போல வாகனங்களுக்கு மின்சார வழித்தடம் ஏற்படுத்தப்படும். இது, ஸ்வீடன்,நார்வே போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ள தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. மின்சார கேபிள்கள் மூலம் வழங்கப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி இந்தப் பாதையில் வாகனங்கள் செல்லும். தற்போது பல்வேறு தொழில்நுட்பங்களை எங்கள் அமைச்சகம் மதிப்பீடு செய்து வருகிறது. இவ்வாறு நிதின் கட்கரி கூறினார்.