சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் நடந்த கவுன்சில் கூட்டத்தை துணை மேயர், 3 மண்டல தலைவர்கள் உட்பட பெரும்பான்மை கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.
சிவகாசி மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் திமுக 24, கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 6, மதிமுக 1, விசிக 1 , என 32 இடங்களிலும், அதிமுக 11, பாஜக 1, சுயேச்சை 4 இடங்களிலும் வெற்றி பெற்றது. அதிமுக கவுன்சிலர்கள் 9 பேர் திமுகவில் இணைந்தனர். இதையடுத்து திமுகவைச் சேர்ந்த சங்கீதா மேயராகவும், விக்னேஷ்பிரியா துணை மேயராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
ஆரம்பம் முதலே உட்கட்சி பூசல் காரணமாக மேயருக்கும், துணை மேயர், மண்டல தலைவர்கள் உட்பட திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வளர்ச்சி பணிகள் தேக்கமடைந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கவுன்சிலர்களை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க அறிவுறுத்தினார்.
இந்நிலையில் சுதந்திர தின விழா, தமிழக அரசின் காலை உணவு திட்டம் தொடக்க விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் திமுக கவுன்சிலர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு மேயர் உரிய மரியாதை வழங்கவில்லை எனக்கூறி புறக்கணித்தனர்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் கவுன்சில் கூட்டம் நடக்காத நிலையில் நேற்று(செப்டம்பர் 29) கவுன்சில் கூட்டம் நடைபெறும் என ஒரு வாரத்திற்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. அதன்படி மேயர் சங்கீதா தலைமையில் நேற்று கவுன்சில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் 2022 – 2023 ம் ஆண்டுக்கான நிர்வாக அறிக்கை பதிவு, எல்இடி விளக்கு பொறுத்த ரூ.5.36 கோடிக்கு கடன் பெறுதல் உட்பட 39 தீர்மானங்கள் முன்மொழியப்பட்டது. இதில் திமுகவைச் சேர்ந்த துணை மேயர் விக்னேஷ்பிரியா, மண்டல தலைவர்கள் அழகுமயில், குருசாமி, சூர்யா உட்பட பெரும்பான்மை கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்தனர்.
மேயர் உட்பட 20 கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு வந்து விவாதத்தில் பங்கேற்றனர். 3 கவுன்சிலர்கள் கையெழுத்து போட்டு விட்டு உடனே சென்று விட்டனர். இந்நிலையில் 25 கவுன்சிலர்கள் ஆதரவுடன் தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
விவாதமின்றி தீர்மானங்களை நிறைவேற்றுவதால் மக்களின் கோரிக்கைகள் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லபடுவதில்லை என பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.