சுங்கச்சாவடி இயக்குநர்கள் தனி அதிகாரம் பெற்றவர்கள் போல் நடந்துகொள்வதாக உயர் நீதிமன்றம் கண்டிப்பு

மதுரை: ‘சுங்கச்சாவடி திட்ட இயக்குநர்கள் தனி அதிகாரம் கொண்டவர்கள் போல் நடந்து கொள்கின்றனர்’ என உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி நெடுஞ்சாலை மோசமான நிலையில் இருப்பதால் வாகைகுளம் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக் கோரி நெல்லையைச் சேர்ந்த சிதம்பரம், பெர்டின் ராயன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது வாகைகுளம் சுங்கச்சாவடியில் 50 சதவீத கட்டணம் வசூலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை திரும்ப பெறக் கோரி தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்ற உத்தரவை ஒருநாள் கூட நிறைவேற்றாமல் 50 சதவீத கட்டண உத்தரவை திரும்ப பெறக் கோரி மனு தாக்கல் செய்ததற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றிவிட்டு வருமாறு உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர்,டி.பரத சக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், ‘நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் நெடுஞ்சாலைத் துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. நீதிமன்றம் ஒன்றை சொன்னால், நெடுஞ்சாலைத்துறை இன்னொன்றை செய்கிறது. இதற்காக ஏன் தேசிய நெடுஞ்சாலைத் துறை மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது?

சுங்கச்சாவடி திட்ட இயக்குநர்கள் நீதிமன்ற உத்தரவுகளை மதிப்பதில்லை. சுங்கச்சாவடி திட்ட இயக்குநர்கள் தனி அதிகாரம் படைத்தவர்கள் போல செயல்படுவதா? 50 சதவீத கட்டணம் வசூலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டால், நீங்களாகவே மனமிறங்கி கட்டணக் குறைப்பு செய்ததாக அறிக்கை தாக்கல் செய்துள்ளீர்கள்.

இந்த அறிக்கை மீது நீதிமன்றத்துக்கு திருப்தியில்லை. மனுதாரர்கள் தேவைப்பட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம். நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. விசாரணை 2 வாரங்கள் ஒத்திவைக்கப்படுகிறது’ என உத்தரவிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.