பட்டுக்கோட்டையில் டாஸ்மாக்கில் மது வாங்கிச் சென்ற மீன் வியாபாரி ஒருவரை, விற்பனைக்கு வாங்கி சென்றதாக கூறி கலால் போலீஸ் ஏட்டு தாக்கியதில் மீன் வியாபாரி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இறந்தவரின் உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பட்டுக்கோட்டை அருகே உள்ள தாமரங்கோட்டை உம்பளகொள்ளை பகுதியை சேர்ந்தவர் வீரையன் (52). மீன் வியாபாரம் செய்து வந்தார். நேற்று வியாபாரத்தை முடித்த பிறகு டாஸ்மாக் கடைக்கு சென்றவர், தன்னுடன் மீன் வியாபாரம் செய்பவர்களுக்கும் சேர்த்து ஒன்பது மது பாட்டில் வாங்கி சென்றுள்ளார்.
பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமல் பிரிவில் ஏட்டாக பணிபுரியும் குணசீலன் என்பவர், பழஞ்சூர் நசுவினி ஆற்று பாலத்தின் மேல் நின்று கொண்டிருந்தார். அப்போது வீரையனை மறைத்து சோதனை செய்ததில் அவரிடம் ஒன்பது மதுபாட்டில்கள் இருந்ததை பார்த்து விற்பனை செய்வதற்கு வாங்கி செல்கிறாயா என கேட்டுள்ளார்.
அதற்கு வீரையன் என்னுடன் மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்பவர்களுக்கு வாங்கி செல்வதாக தெரிவித்துள்ளார். இதை நம்பாத குணசீலன், வீரையனை கடுமையாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் வீரையனுக்கு தலை, நெஞ்சு உள்ளிட்ட இடங்களில் கடுமையாக அடிப்பட்டுள்ளது. பின்னர் தனது டூ வீலரிலேயே வீரையனை ஏற்றிக் கொண்ட குணசீலன் டாஸ்மாக் கடைக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த சேல்ஸ்மேன் ராதாகிருஷ்ணனிடம், விசாரித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அங்கிருந்து வீரையனை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லும் வழியில் துவரங்குறிச்சி முக்கூட்டுச்சாலை அருகே சென்ற போது வீரையன் தனக்கு நெஞ்சு வலிப்பதாக குணசீலனிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து அப்படியே மயங்கி விட்டார். பின்னர் போலீஸார் வீரையன் மகன் முருகேசனை வரவழைத்து அவரிடம் வீரையனை ஒப்படைத்தனர். தன் அப்பாவை அழைத்து கொண்டு பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை சென்று முதலுதவி அளித்த முருகேசன் பின்னர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவ மனைக்கு அழைத்து சென்றார்.
இந்நிலையில் வீரையன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து வீரையன் உறவினர்கள் பட்டுக்கோட்டை டி.எஸ்.பி அலுவலகத்தில், போலீஸ் ஏட்டு குணசீலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி உடலை வாங்க மறுத்து மனு அளித்தனர். அப்போது போலீசார் அலட்சியம் காட்டியதால் உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராட்ட்டம் தொடர்ந்ததால் நுாற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து வீரையன் உறவினர்களிடம் பேசினோம், “குடிப்பதற்காக டாஸ்மாக் கடையில் மது வாங்கி சென்றவரை மறித்து, போலீஸ் ஏட்டு தாக்கிய காரணத்தால் வீரையன் உயிரிழந்திருக்கிறார். இதற்கு காரணமான போலீஸ் ஏட்டு குணசீலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வீரையன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
உடனடியாக அரசு இதனை நிறைவேற்றி தரவில்லை என்றால் எங்கள் போராட்டம் தொடரும்” என்றனர். டி.எஸ்.பி., பிரித்திவிராஜ் சவுக்கான் மற்றும் தாசில்தார் ராமச்சந்திரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததுடன் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு இதை கொண்டு செல்வதாக உறுதியளித்துள்ளனர். இந்த சம்பவம் பட்டுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.