தவறான ஊசியால் இறந்த சிறுமி? – பார்க்கிங்கில் உடலை வீசிச் சென்ற மருத்துவமனை ஊழியர்கள்- உ.பி அதிர்ச்சி

உத்தரப்பிரதேச மாநிலம், மெயின்புரியின் கிரிரோர் பகுதியில் உள்ள கர்ஹால் சாலையில் ராதா சுவாமி என்ற தனியார் மருத்துவமனை இருக்கிறது. இந்த மருத்துவமனையில், பாரதி என்ற 17 வயது சிறுமி காய்ச்சலுக்காக சிகிச்சைப் பெற்றிருக்கிறார். உடல்நலம் தேறிவந்த சிறுமிக்கு மருத்துவர் ஓர் ஊசிபோட்டதாகக் கூறப்படுகிறது. அந்த நிலையில், சிறுமி திடீரென இறந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அதையடுத்து, அவரின் உடலை மருத்துவமனை ஊழியர்கள் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கில் வைத்துவிட்டு, வேகமாகச் சென்றுவிட்டதாக, சிறுமியின் பெற்றோர் குற்றம்சாட்டினர்.

மருத்துவம்

சிறுமியின் பெற்றோர் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் குறித்துப் பேசிய சிறுமியின் அத்தை மனிஷா, “உடல் நலம் தேறிவந்த சிறுமிக்கு மருத்துவர் ஊசி போட்டார். அதன் பிறகு அவளின் உடல் பலவீனமடைந்து வந்தது. திடீரென அவளுக்கு மருத்துவம் பார்க்க முடியாது என்றும், வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறும் கூறினார்கள். திடீரென அவளது உடலை மருத்துவ ஊழியர்கள் தூக்கிவந்து, பைக்மீது வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள்.

அப்போது அவள் இறந்துவிட்டாள். அதன் பிறகு மருத்துவரையும், ஊழியர்களையும் தேடினோம். அவர்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டார்கள்” எனக் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து, மாவட்ட முதன்மை மருத்துவ அதிகாரி ஆர்.சி.குப்தா, “சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்குச் சென்றபோது மருத்துவரோ அல்லது நிர்வாகப் பணியாளர்களோ யாரும் இல்லை. மருத்துவமனையில் இருந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நோயாளி அருகிலுள்ள சமூக சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டிருக்கிறது.

காவல்துறை

மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக குடும்ப உறுப்பினர்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர். இது குறித்து விரிவான விசாரணை நடத்தி ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சி.எம்.ஓ-வுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.