பஞ்சாப்பில் வயிற்றுவலி என மருத்துவமனைக்கு வந்த நபரைப் பரிசோதித்த மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சையின் இறுதியில் பெரும் அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. முன்னதாக, 40 வயது நபர் ஒருவர் காய்ச்சல், கடும் வயிற்றுவலி, குமட்டல் போன்ற காரணங்களால், மோகாவிலுள்ள மெடிசிட்டி மருத்துவமனையில் இரண்டு நாள்களாக அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும், நோயாளிக்கு வயிற்று வலி மட்டும் குறையாததால், வலிக்கான காரணத்தைக் கண்டறிய மருத்துவர்கள் அவரின் வயிற்றை எக்ஸ்ரே, ஸ்கேன் எடுத்துப் பார்க்க முடிவு செய்தனர்.

பின்னர் எக்ஸ்ரே, ஸ்கேனைப் பார்க்கையில் நோயாளியின் வயிற்றில் பல உலோகப் பொருள்கள் இருப்பது தெரியவந்திருக்கிறது. அதையடுத்து மருத்தவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவுசெய்தனர். அதன்படி, அறுவை சிகிச்சை செய்ய ஆரம்பித்த மருத்துவர்களுக்கு, நோயாளின் வயிற்றிலிருந்த பொருள்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. சுமார் மூன்று மணிநேரம் நீடித்த அறுவை சிகிச்சையின் முடிவில், வயிற்றிலிருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட பொருள்கள் வெற்றிகரமாக வெளியே எடுக்கப்பட்டன. அவற்றில், `இயர்போன்கள், வயர், ஊக்கு, ஹேர்க்ளிப்புகள், ராக்கி, செயின், பட்டன்கள், போல்டுகள்’ உட்பட பல பொருள்கள் இருந்தன.
பின்னர் இது குறித்துப் பேசிய மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் அஜ்மீர் கல்ரா, “இது போன்ற பிரச்னையை இதற்கு முன்பு பார்த்ததே இல்லை. இதுவே முதன்முறை. கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த நபர் வயிற்றுப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். தற்போது அவரின் வயிற்றிலிருந்த அனைத்து பொருள்களும் எடுக்கப்பட்டுவிட்டன. இருப்பினும், அவரின் உடல்நிலை இன்னும் சீராகவில்லை. நீண்ட நாள்களாக இந்தப் பொருள்கள் வயிற்றில் இருந்ததால் இத்தகைய பிரச்னை ஏற்பட்டிருக்கிறது” என்று கூறினார்.

மேலும், இது குறித்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர், “எங்களுக்கே இது ஆச்சர்யமாக இருக்கிறது. அவர் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த பொருள்களையெல்லாம் எப்போது, எதற்காக, எப்படி உட்கொண்டார் என்று தெரியவில்லை” என்று தெரிவித்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.