சிவகாசி: “சுற்றுச்சூழல் மாசுபாடு என்பது உலகளாவிய பிரச்சினை. ஆனால், நமது கலாசாரம், பண்பாடு ஆகியவற்றில் சமரசம் செய்துகொள்ள முடியாது” என்று சிவகாசியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலதிபர்கள் உடனான சந்திப்பின்போது ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
சிவகாசி ரோட்டரி கிளப் ஆப் சிவகாசி சென்ட்ரல் சார்பில் ‘எண்ணித் துணிக’ என்ற தலைப்பில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் சிவகாசி தொழிலதிபர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ரோட்டரி சங்க தலைவர் சுனைராஜா வரவேற்றார். பட்டாசு உற்பத்தியாளர்கள் சார்பில் பாஸ்கர்ராஜ், கட்டுப்பாடுகளை தளர்த்தி பட்டாசு ஏற்றுமதி வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தார். தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் விஜய ஆனந்த், அனைத்து வகை சீன லைட்டர்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தார். மாஸ்டர்ஸ் பிரிண்டர்ஸ் அசோசியேசன் சார்பில் மின் கட்டணத்தை குறைக்க வேண்டும், பிரின்டிங் பேப்பர்களுக்கான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக குறைக்க வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.
விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது: “சிவகாசி நாட்டின் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. சோசலிச மனப்பான்மையுடன் சிவகாசி தொழில்கள் மூலம் அனைவருக்கும் வளர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. தனியார் தொழில் நிறுவனங்கள் பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்துவதுடன் நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறது.
கடந்த ஆட்சியாளர்கள் மக்கள் மீது நம்பிக்கை வைக்கவில்லை. கடந்த 9 ஆண்டுகளில் நாடு உலக அளவில் வளர்ந்துள்ளது. இந்தியாவின் தலைமைப் பண்பு உலக நாடுகளின் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கிறது. இன்று உலகில் மிகவும் வேகமாக வளரும் நாடாக இந்தியா உள்ளது. இதற்குக் காரணம் இந்த அரசு மக்களை நம்புகிறது. மக்களின் முழு ஆதரவை பெற்ற அரசு உள்ளது.
2014-ம் ஆண்டு 500 ஆக இருந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது 20 ஆயிரம் ஆக உயர்ந்துள்ளது. ஸ்டார்ட் அப் தொழிலில் இந்தியா உலகின் முதல் மூன்று நாடுகளுக்குள் உள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியா உலகின் முதல் இடத்தில் உள்ளது. 140 கோடி மக்களை கொண்ட நம் நாட்டில் ஒரு கோடி பேர் கூட அரசு வேலையில் இல்லை. திறமையை அங்கீகரிக்கவில்லை என்றால் வளர்ச்சி சாத்தியமாகாது.
கடந்த 9 ஆண்டுகளில் வளர்ச்சிக்கான சூழலை உருவாக்கியதால் இந்தியா உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடாக மாறியுள்ளது. பாதுகாப்புத் துறையில் ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா வளர்ந்து உள்ளது.
கடந்த ஆண்டு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி 8 ஆயிரம் கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. அடுத்த ஆண்டுகளில் ராணுவ தளவாட ஏற்றுமதியை 100 மில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் நிறைய மாற்றங்களையும் செய்துள்ளார். ஆனால் நமது இயந்திரம், சமூகம் அந்த மாற்றத்தை உணர சில காலங்கள் ஆகும்.
நிச்சயம் இந்தியா மாறும். சிறந்த அரசியல் சிறந்த பொருளாதாரத்தை உருவாக்கும். தமிழக அரசியல் வேறுமாதிரி உள்ளது. தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் இரு வந்தே பாரத் ரயில்களை பிரதமர் தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்துக்கு கடந்த ஆண்டு 35 ஆயிரம் கோடி நிதி வழங்கப்பட்டு உள்ளது. இது பிற மாநிலங்களை விட அதிகம். தமிழர்கள் இந்திய குடும்பத்தின் உறுப்பினர்கள்.
நாடு என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது.ஜி-20 மாநாட்டின் போது பாரத் மண்டப கட்டுமான பணியில் ஈடுபட்ட 3,000 தொழிலாளர்களுக்கு பிரதமர் மோடி விருந்து அளித்தார். சிவகாசி தொழில் துறையினர் அளித்த கோரிக்கை மனுக்களை முழுமையாக படித்து அதற்கு என்னால் இயன்ற வரை தீர்வு காண முயல்வேன்.
கட்டுப்பாடுகளால் சிவகாசி பட்டாசு தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு தொழில் பல லட்சம் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதுடன், 100 கோடி மக்களுக்கு சந்தோஷத்தையும் அளித்து வருகிறது. தீபாவளி, திருவிழாக்கள் மட்டுமின்றி இந்தியா கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றாலும், பட்டாசு வெடித்து கொண்டாடுகிறோம். பட்டாசு என்பது நமது சந்தோஷத்தின் வெளிப்பாடாக உள்ளது. இது நமது கலாசாரத்தோடு ஒருங்கிணைந்தது.
பட்டாசு பிரச்சினை குறித்து நான் ஏற்கெனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசிய உள்ளேன். சுற்றுச்சூழல் மாசுபாடு என்பது உலகளாவிய பிரச்சினை. ஆனால், நமது கலாசாரம், பண்பாடு, பண்டிகைகளில் நாம் சமரசம் செய்து கொள்ள முடியாது. அதேபோல், பிற துறைகளும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு நான் சிவகாசி வந்திருந்தபோது உங்களில் சிலரை சந்தித்தேன். சிலரை மட்டுமே சந்தித்தாலும் உங்களின் ஒட்டுமொத்த பிரச்சினையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது” என்றார்.
பிளாஸ்டிக் அசோசியேசன், பேப்பர் மெர்சண்ட் அசோசியேசன், இளம் தொழில் முனைவோர் சங்கம், பாஜக மாநில பொது செயலாளர் ராம சீனிவாசன் ஆகியோர் ஆளுநருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர்.