புதுடெல்லி: ‘‘நாட்டிலேயே மிக மோசடியான அமைப்பு இஸ்கான். இந்த அமைப்பு கோசாலையில் உள்ள பசுக்களை அடிமாடுகளாக விற்கிறது’’ என பாஜக எம்.பி. மேனகா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதை இஸ்கான் அமைப்பு மறுத்துள்ளது.
பகவான் கிருஷ்ணரை வழிபடும் சர்வதேச அமைப்பாக இஸ்கான் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பினர் கிருஷ்ணர்கோயில்களில் வழிபாடு நடத்துவதுடன், கோசாலைகளையும் பராமரித்து வருகின்றனர். இதற்காக இந்த அமைப்பு அரசிடம் இருந்து நிலங்கள் உட்பட பல பயன்களை பெற்றுவருகிறது.
இந்நிலையில் விலங்குகளின் உரிமைக்காக குரல் கொடுக்கும் பாஜக எம்.பி. மேனகா காந்தி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
நாட்டிலேயே மிக மோசடியான அமைப்பு இஸ்கான். இது கோசாலைகளை பராமரிக்கிறது. இதற்காக பரந்த நிலங்கள் உட்படபல பயன்களை இந்த அமைப்பு அரசிடம் இருந்து பெற்று வருகிறது. நான் சமீபத்தில் ஆந்திர மாநிலம் அனந்தபூரில் உள்ள கோசாலைக்கு சென்றேன். அங்கு கறவை நின்றுபோன மாடுகள் எதுவும் இல்லை. ஒரு கன்றுக்குட்டி கூட அங்கு இல்லை. எல்லாவற்றையும் விற்றுள்ளனர்.
இஸ்கான் அமைப்பு பசுக்களை அடிமாடுகளாக விற்கிறது. தெருக்களில் ‘ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா’ என பாடுகின்றனர். தங்கள் வாழ்வாதாரமே பால் விற்பனையில்தான் உள்ளது என்கின்றனர். ஆனால், பசுக்களை அடிமாடுகளாக அவர்கள் விற்ற அளவுக்கு யாரும் செய்ய வில்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த இஸ்கான் அமைப்பின் தேசிய செய்தி தொடர்பாளர் யுதிஸ்திர் கோவிந்த தாஸ் கூறுகையில், ‘‘இந்தியாவில் மட்டும் அல்லாது உலகம் முழுவதும் பசுக்கள் மற்றும் காளைகளை பாதுகாப்பதில் இஸ்கான் அமைப்பு முன்னணி அமைப்பாக உள்ளது. வாழ்நாள் முழுவதும் சேவையாற்றிய பசுக்களும், காளைகளும், மேனகா காந்தி குற்றம்சாட்டியுள்ளதுபோல் அடிமாடுகளாக விற்கப்படுவதில்லை. மேனகா காந்தி மிகவும் பிரபமான விலங்கு நல ஆர்வலர், இஸ்கான் அமைப்பின் நல விரும்பி. அவர் தெரிவித்த குற்றச்சாட்டுகள் ஆச்சர்யமாக உள்ளது’’ என்றார்.