பலூசிஸ்தான்: பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மசூதி அருகே நடந்த குண்டுவெடிப்பில் 52 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
பலூசிஸ்தானில் மஸ்துங் மாவட்டத்தில் உள்ள மதினா மசூதியின் அருகேதான் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மஸ்துங் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நவாஸ் கஷ்கோரியும் உயிரிழந்தார். மிலாடி நபியை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்புத் தொழுகைக்காக ஏராளமானோர் திரண்டிருந்த நிலையில், இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. கூட்டம் அதிகமாக இருந்ததால் பாதிப்பும் அதிகமாகியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து நகர நிலைய அலுவலர் முகமது ஜாவேத் லெஹ்ரி கூறுகையில், “நடந்தது தற்கொலைப் படை தாக்குதல். டிஎஸ்பியின் கார் அருகே மனித வெடிகுண்டாக வந்தவர் வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
இந்நிலையில், ஷாஹீத் நவாப் கவுஸ் பக்ஷ் ரயிசானி நினைவு மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி மருத்துவர் சயீது மிர்வானி, இதுவரை 52 பேர் இறந்துள்ளதாகவும், 130 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்ததாக பாகிஸ்தானின் ‘டான்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பலூசிஸ்தானின் இடைக்கால உள்துறை அமைச்சர் ஜன் அசக்சாயி இந்தச் சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
கடந்த 15 நாட்களில் இது மாஸ்துங் மாவட்டத்தில் நடக்கும் இரண்டாவது தற்கொலைப்படை தாக்குதல் ஆகும். முன்னதாக, மாத தொடக்கத்தில் நடந்த தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இன்று 50-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இது குறித்து இடைக்கால முதல்வர் அலி மர்தான் டோம்கி கூறும்போது, எதிரிகள் பலூசிஸ்தானின் மத சகிப்புத்தன்மைக்கும் அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் நோக்கில் இந்த சதி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய நிகழ்வில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மூன்று நாட்கள் மாகாணத்தில் துக்கம் அனுசரிக்கப்படும்” என்றார்.