பாலியல் புகார்
கடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்த தொடரில் அந்த அணி சிறப்பாக விளையாடததால் தோல்வியை தழுவநேரிட்டது. இதனையடுத்து இலங்கை வீரர்கள் சொந்த நாட்டுக்கு கிளம்பும்போது திடீரென அந்நாட்டு காவல்துறையினரால் அந்த அணியின் நட்சத்திர வீரர் தனுஷ்கா குணத்திலகா கைது செய்யப்பட்டார். அதுவும் அந்நாட்டு பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரில் அவர் கைது செய்யப்பட்டது தெரிய வந்தது. இது இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
பெண் புகார் என்ன?
காவல்துறையிடம் அந்த பெண் அளித்த வாக்குமூலத்தில், இருவரும் சம்மதத்துடன் உடலுறவு கொண்டதாக தெரிவித்தார். அதன் பின்னர் அவர் பாதுகாப்பாக நடந்து கொள்ளவில்லை என தெரிவித்த அந்தப் பெண், அதற்கு தான் சம்மதம் தெரிவிக்காததால் தணுஷ்கா குணத்திலகா அடித்து துன்புறுத்தியதாகவும் கூறியிருந்தார். இது குறித்து தணுஷ்கா குணத்திலகாவை கைது செய்த காவல்துறை அவரிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றது.
குணத்திலகா விடுதலை
இந்த புகாரில் அவர் சிக்கியதால் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து நீக்கப்பட்ட அவர், கடந்த 11 மாதங்களாக ஆஸ்திரேலியாவிலேயே தங்கி வழக்கை நடத்திக் கொண்டிருந்தார். பெண் அளித்த புகாரில் குணத்திலகாவிடமும் வாக்குமூலம் காவல்துறை பெற்றபிறகு வழக்கு நீதிமன்றத்துக்கு சென்றது. அதில், குணத்திலகா அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளார். சம்மதத்துடன் மேற்கொண்ட உடலுறவுக்குப் பிறகு உள்நோக்கத்துடன் அவர் மீது புகார்கள் வைக்கப்பட்டிருப்பதாகவும் நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் இருந்து விடுதலையான தணுஷ்கா குணத்திலகா, கடந்த 11 மாதங்கள் தன் வாழ்நாளில் மறக்க முடியாத கடினமான காலம் என தெரிவித்தார். மீண்டும் சொந்த நாட்டுக்கு திரும்பி கிரிக்கெட் பயிற்சியை தொடங்க இருப்பதாகவும், அதன் மூலம் இலங்கை அணியில் இடம்பிடித்து சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்குவேன் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறியுள்ளார்.