பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பங்கள், பாலியல் கொடுமைகள் வடமாநிலங்களில் அடிக்கடி நடந்துகொண்டிருக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் சிறுமி ஒருவரைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, செங்கல்சூளையில் எரித்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்திலும் அது போன்ற ஒரு கொடுமை நடந்திருக்கிறது. உஜ்ஜயினி மாவட்டத்திலுள்ள மகாகால் என்ற இடத்தில் 12 வயது சிறுமி ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வீட்டைவிட்டு விரட்டியடிக்கப்பட்டார்.

அவர் கடுமையான ரத்தப்போக்குடன் அரை நிர்வாணமாக சுமார் 8 கி.மீ தூரத்துக்கு நடந்து சென்று, ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டி உதவி கேட்டிருக்கிறார். இது தொடர்பான வீடியோ, சோஷியல் மீடியாவில் பகிரப்பட்டுவருகிறது. அரை நிர்வாணமாக அந்தச் சிறுமி உதவி கேட்டபோது யாரும் அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை. அவர் உதவி கேட்டு ஒவ்வொரு வீட்டுக் கதவாகத் தட்டினார். அவர் அப்படியே இரண்டு மணி நேரத்துக்கும் மேல் நடந்து சென்றார். கடைசியாக ஆசிரமம் ஒன்றைச் சென்றடைந்தார். அங்கிருந்த மதகுரு ஒருவர், சிறுமிக்குக் கட்டிக்கொள்ள ஒரு துண்டு கொடுத்து, அவரை மாவட்ட மருத்துமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார்.

அவருக்கு அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டிருந்தது. இதையடுத்து போலீஸார் தாமாக முன்வந்து அந்தச் சிறுமிக்கு ரத்தம் கொடுத்தனர். போலீஸார் சிறுமியிடம் விசாரித்தபோது, அவரால் அதிர்ச்சியில் எதையும் சொல்ல முடியவில்லை. போலீஸார் நடத்திய விசாரணையில் அந்தச் சிறுமி உத்தரப்பிரதேச மாநிலம், பிரயக்ராஜ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்திருக்கிறது. சிறுமியின் தாயாருக்கும் ஏதோ நடந்திருக்கிறது.
சிறுமி முழுமையாக எதையும் சொல்ல முடியாமல், அதிர்ச்சியில் இருக்கிறார். போலீஸார் தனிப்படை அமைத்து அந்தச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தவர்களைத் தேடினர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய மதகுரு (சிறுமிக்கு உதவியர்), “அந்தச் சிறுமி அரை நிர்வாண நிலையில், ரத்தம் சொட்ட உதவி நாடி வீதிக்குள் அலைந்து கொண்டிருந்தாள். எங்களுடைய ஆசிரமத்தை அவர் நாடி வந்தார். உடனே நான் அவளை உள்ளே அழைத்துச் சென்றேன். அவள் மிகவும் பயந்து காணப்பட்டாள். அவளுடைய ஆடைகள் கிழிக்கப்பட்டிருந்தன. அதனால், உடனடியாக ஒரு துண்டைக் கொடுத்தேன்.
சிறுமியிடம் என்ன நடந்ததென்ன விசாரித்தபோது, அவளால் பதிலளிக்க முடியவில்லை. அவள் அச்சத்தின் பிடியில் சிக்குண்டு கிடந்தாள். நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது யாராவது நெருங்கினால், பயத்தில் உடனே என் பின்னால் ஒளிந்துகொண்டாள். அதையடுத்து நாங்கள் அவளுக்கு பாதுகாப்பு அளிப்போம் என்ற உத்தரவாதத்தை அளித்தோம். எங்களுடைய தேற்றுதலுக்குப் பிறகே, சிறுமி சற்றே இயல்புநிலைக்குத் திரும்பினாள். அவளுடைய உடலில் காயங்கள் பெரிதளவில் இருந்தன. அதனால், உடனடியாக போலீஸாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தோம். அவர்கள் தகவல் தெரிவித்த 20 நிமிடங்களில் எங்கள் ஆசிரமத்துக்கு விரைந்தனர். பின்னர் போலீஸார், இங்கிருந்து அவளை பத்திரமாக கூட்டிச் சென்றனர்” என்று தெரிவித்தார்.

சிறுமியை மீட்ட போலீஸார், அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை அளித்தனர். மேலும், சிறுமிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவள் பாலியல் வன்கொடுமைக்குள்ளானது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்த போலீஸார், தீவிர விசாரணையில் இறங்கினர். இந்த நிலையில், சந்தேகத்தின்பேரில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரைக் கைதுசெய்திருக்கும் போலீஸார், மேலும் மூவரிடம் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.