புகழஞ்சலி – எம்.எஸ்.சுவாமிநாதன் | “விவசாய வளர்ச்சிக்கு புதிய பாதையை வித்திட்டவர்” – ஜி.கே.வாசன்

சென்னை: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் இழப்பு விவசாய பெருங்குடி மக்களுக்கும், தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும், ஏன் உலகத்துக்கே பேரிழப்பாகும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன் உடல்நிலைக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன்.எம்.எஸ்.சுவாமிநாதன் “பசுமை புரட்சியின் தந்தை” என்று எல்லோராலும் அழைக்கப்பட்டவர். இன்று விவசாயத்தில் பல்வேறு வளர்ச்சியை கண்டுள்ளோம் என்றால் அதற்கு அடித்தளம் இட்டவர் எம்.எஸ்.சுவாமிநாதன் என்றால் அது மிகையாகாது. விவசாய வளர்ச்சிக்கு புதிய பாதையை வித்திட்டவர். இந்தியாவில் அரிசி பற்றாக்குறையை போக்குவதற்கு, அதிக மகசூலை பெறுவதற்கு புதிய யுக்திகளை கையாண்டும், புதிய ரக அரிசி மற்றும் கோதுமை வகைகளை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்.

உலக அளிவில் விஞ்ஞான புரட்சியை ஏற்படுத்திய எம்.எஸ் சுவாமிநாதன் அவர்களின் சேவையை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன், போன்ற உயரிய விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது. பல்வேறு பல்கலைக்கழகங்கள் இவருக்கு 64 கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. மேலும் பல்வேறு சர்வதேச நாடுகள், நிறுவனங்கள் பல்வேறு விருதுகளையும், பட்டங்களையும் வழங்கியுள்ளது.

இவர் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குனராக, பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள “உலக அரிசி ஆய்வு நிறுவனத்தின்” தலைமை இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்படதக்கது. மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனாருடன் நெருங்கிப் பழகியவர். அவர் மாநிலங்கவை உறுப்பினராக இருந்தபோது நான் அவருடன் பணியாற்றியதை பெருமையாக நினைவு கூறுகிறேன்.

சுவாமிநாதன் இழப்பு விவசாய பெருங்குடி மக்களுக்கும், தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும், ஏன் உலகத்துக்கே பேரிழப்பாகும். அவைரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்துக்கும் உற்றார் உறவினர்களுக்கும், விவசாய பெருங்குடி மக்களுக்கும், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக, வேளாண்மை துறைக்கான புரட்சிகரமான பங்களிப்பினையும் தாண்டி எம்.எஸ்.சுவாமிநாதன் புதுமையின் ஆற்றல் மையமாகவும், பலருக்கும் வழிகாட்டியாகவும் இருந்தார் என்று பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். | வாசிக்க > “பசுமைப் புரட்சியின் சிற்பி… பலருக்கு வழிகாட்டி!” – எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு முர்மு, மோடி, கார்கே புகழஞ்சலி

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.