வாச்சாத்தி கிராமத்தில் சுமார் 300 வீடுகள். கடந்த 1992-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதியில், மனித உரிமையை மல்லாக்கப் புரட்டிப்போட்ட மிகப் பெரிய அத்துமீறல் அங்கு நடந்தது. இந்தக் கிராமத்தை ஒட்டியிருக்கும் சித்தேரி மலைகளில் அப்போது சந்தன மரங்கள் ஏராளம். இவற்றை அரூர் சரக வனத் துறை அதிகாரிகள் சிலரின் ஆசியோடு, மரக் கடத்தல் முதலைகள் சிலர் வெட்டிக் கடத்திக்கொண்டு இருந்தனர்.
அதிகக் கூலி கிடைக்கிறதே என்று கிராமவாசிகளில் சிலரும் மரம் வெட்டும் பணிக்குச் சென்றனர். சில தொல்லைகள் வரத் தொடங்கவே, மிரண்டுபோன மக்கள் மரம் அறுக்கும் வேலைக்குச் செல்ல மறுத்தனர். மேலும், கடத்தல் நடமாட்டம் குறித்த தகவல் அம்பலப்பட… அதிகாரிகள் பொங்கி எழுந்தனர். ‘சந்தனம் உட்பட விலை மதிப்பு மிக்க வனச் செல்வங்களை, வாச்சாத்தி மக்கள் பெருமளவு கொள்ளை அடிக்கிறார்கள்…’ என்று பொய்யான தோற்றத்தை உருவாக்கி, ரெய்டு என்ற பெயரில் வனத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை ஆகியவை கிராமத்துக்குள் அன்றைய தினம் புகுந்தன.
அப்போது அதிகாரிகள் சிலர், ஊரில் இருந்த பருவம் அடைந்த, பருவம் அடையாத சிறுமிகள் 18 பேரை ஏரிக்குக் கடத்திச் சென்று… வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு மாபெரும் பாலியல் கொடூரத்தை அரங்கேற்றினர். அதோடு, வாச்சாத்தி மக்கள் 133 பேரை கைது செய்து சிறைக்கு அனுப்பினர். இந்த விஷயம், கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் மலைவாழ் மக்கள் சங்கத்தினர் மூலம் வெளிச்சத்துக்கு வர… தமிழகமே அதிர்ச்சியில் உறைந்தது.
பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகே வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பிறகு சி.பி.ஐ. விசாரணைக்கும் உத்தரவு இடப்பட்டது. 269 குற்றவாளிகளைப் பட்டியல் இட்டு, இந்த வழக்கை தர்மபுரி அமர்வு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. நடத்தி வந்தது. 19 ஆண்டுகளாக இழுபறியாக இருந்த இந்த வழக்கின் விசாரணை, முடிவுக்கு வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
வன்கொடுமை, அத்தியாவசிய உணவு ஆதாரங்களை அழித்தல், வன்கொடுமை ஆகிய குற்றங்கள் நடந்ததற்கான வலுவான ஆதாரங்களோடு வழக்கை சி.பி.ஐ. நடத்தியது. வழக்கு விசாரணையில் முடிவில், வாச்சாத்தி மலை கிராமத்தில் 18 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்தது, கிராம மக்களிடம் அத்துமீறியது உள்ளிட்ட வழக்குகளில் இந்திய வனப்பணி அதிகாரிகள் நால்வர் உள்பட 269 பேரும் குற்றவாளிகள் என தர்மபுரி நீதிமன்றம் 2011-ல்பரபரப்பு தீர்ப்பு அளித்தது. இவர்களில் 17 பேர் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர்.
இந்த வழக்குகளின் குற்றவாளிகள் அனைவரும் 1992-ல் வனத் துறை, வருவாய்த் துறை, காவல் துறையில் பொறுப்பு வகித்தவர்களாவர். குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட வனத்துறை அதிகாரிகள் உள்பட 12 பேருக்கு 17 ஆண்டுகளை சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
தீர்ப்பு வெளியான, 2011 காலகட்டத்தில், 19 ஆண்டுகால காத்திருப்புக்குப் பின் வழங்கப்பட்ட தீர்ப்பு என்பதால், தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்ற வளாகத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடினர். இதனால், அங்கு போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கில், இந்திய வனப்பணி அதிகாரிகள் நால்வர் உள்பட 269 பேரும் குற்றவாளிகள் என தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி குமரகுரு தனது தீர்ப்பில் தெரிவித்தார். இந்திய வனப்பணி அதிகாரிகள் பாலாஜி, ஹரிகிருஷ்ணன், முத்தையன், நாதன் ஆகியோரே குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர்களின் முதன்மையானவர்களாவர். முக்கியக் குற்றவாளி என உறுதிசெய்யப்பட்ட இன்னொரு ஐ.எப்.எஸ் அதிகாரியான சிங்காரவேலு ஏற்கெனவே இறந்துவிட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 269 பேரில் 54 பேர் விசாரணையின்போதே இறந்து விட்டனர் என்பது கவனத்துக்குரியது.
குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட அதிகாரிகள், இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், வாச்சாத்தி கிராமத்தில் நேரடி ஆய்வில் இறங்கினார்.
திட்டமிட்டபடி மார்ச் மாதம் 4-ம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம், 1:30 மணி வரை, நீதிபதி வேல்முருகன் தலைமையில், நீதிபதிகள், மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர், வாச்சாத்தி கிராமத்தில் ஆய்வுசெய்தனர். கிராமத்தில் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஆலமரம் பகுதி, வீடுகள், பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பகுதி, மலைப்பகுதி என 10-க்கும் மேற்பட்ட இடங்களை ஆய்வுசெய்தார் நீதிபதி வேல்முருகன். ஒவ்வொரு வீதியாகச் சென்று வீடுகள், அந்தச் சூழலைப் பார்வையிட்டு, வழக்கில் சி.பி.ஐ குறிப்பிட்ட இடங்களை ஒப்பிட்டுப் பார்த்தார். பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆண்களிடம், விசாரணை மேற்கொண்டார். அந்தப் பகுதியிலுள்ள மாரியம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட்டுவிட்டு, அங்குள்ள மக்களிடம் ஆறுதலாகப் பேசினார்.
நீதிபதி வேல்முருகன் அங்குள்ள மக்களிடம், ‘‘அனைவருக்கும் கஷ்டமான சூழல் நிலவுகிறது. வாச்சாத்தி கிராமத்தில் தற்போதுள்ள குழந்தைகளின் எதிர்காலத்தைச் சிறப்பாக மாற்ற வேண்டும். அதற்கு அனைவரும் முயல வேண்டும். அனைவருக்கும் கல்வி வாய்ப்பை உருவாக்கி, குழந்தைகளைப் படிக்கவைக்க வேண்டும், அவர்களை அடுத்த நிலைக்கு முன்னேற்ற வேண்டும். கிராமத்துக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும், மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுங்கள். உங்களின் நியாயமான கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும். வசதிகள் மேம்படுத்தப்படும்’’ எனக் கூறி, வாச்சாத்தி மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து அங்கிருந்து விசாரணையை முடித்துக்கொண்டு விடைபெற்றார்.
களத்தில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் (அப்போது 13 வயது சிறுமி) உள்ளிட்ட பெண்கள், முதியவர்களிடம் பேசினோம். ‘உரிய நீதி வேண்டும்’ என்ற ஒற்றை வார்த்தையை மட்டுமே, கண்களில் கண்ணீருடனும், கனத்த இதயத்துடனும் நம்மிடம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தான், குற்றவாளிகளின் மேல் முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.