கடந்த செவ்வாய்க்கிழமை அன்று டெல்லியின் வட கிழக்குப் பகுதியான சுந்தர் நகரில், விநாயகர் சதுர்த்தி விழாக் கொண்டாட்டத்தின்போது, கடவுள் பிரசாதத்தைத் திருடியதாகக் கூறி, மன நலம் குன்றிய இஸ்லாமிய இளைஞர் ஒருவரை, சிறுவன் உட்பட ஏழு பேர் அடித்துக் கொன்ற சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்தப் பகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்போது, விநாயகருக்கு பிரசாதமாக வைக்கப்பட்ட வாழைப்பழத்தை, அந்த இஸ்லாமிய இளைஞர் எடுத்துச் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. அதைக் கண்டு ஆத்திரமடைந்த கும்பல், இளைஞரை மின்கம்பத்தில் கட்டிவைத்து, மரக்கட்டைகளால் தாக்கியிருக்கிறது. சுமார் இரண்டு மணி நேரம் இஸ்லாமிய இளைஞரை அந்தக் கும்பல் தாக்கியிருக்கிறது.
இவை அனைத்தும் வீடியோ பதிவுசெய்யப்பட்டு, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டிருக்கிறது. அந்த இஸ்லாமிய இளைஞர், `அடிக்க வேண்டாம்… என்னைக் காப்பாற்றுங்கள்’ என கதறிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, காண்போரின் நெஞ்சை உலுக்கிக்கொண்டிருக்கிறது. இந்தக் கும்பல் நடத்திய தாக்குதலில் பலத்தக் காயமடைந்து சாலையில் விழுந்த இஸ்லாமிய இளைஞரை, அவரின் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் மீட்டு, வீட்டுக்கு அழைத்து வந்து விட்டிருக்கிறார்.
வேலையை முடித்து வீடு திரும்பிய அந்த இளைஞரின் தந்தை, உடலில் பலத்தக் காயங்களோடு இருந்த தன் மகனிடம் நடந்த விஷயங்களைக் கேட்டு, அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
அதையடுத்து உடனடியாக இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸில் புகாரளித்திருக்கிறார் அந்த இளைஞரின் தந்தை. இதற்கிடையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளைஞர், இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அந்தப் புகாரின்பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து ஊடகங்களிடம் பேசிய போலீஸ் அதிகாரி, “கோயிலில் பிரசாதம் திருடியதாக அந்தக் கும்பல் அவரைத் தாக்கியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர் மன நலம் குன்றியவராக இருந்ததால், அவரால் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் கேட்ட கேள்விகளுக்கு, பதிலளிக்க முடியவில்லை. அதனால், அவரைச் சந்தேகத்தின்பேரில் திருடனாக இருக்கலாம் எனத் தாக்கியிருக்கின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவன் உட்பட ஏழு பேரை இதுவரைக் கைதுசெய்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.