பசுக்கூடங்களைப் பராமரிக்கும் `ஹரே கிருஷ்ணா’ இயக்கத்துடன் தொடர்புடைய ISKCON நிறுவனம், உலக அளவில் நூற்றுக்கணக்கான கோயில்களையும், மில்லியன் கணக்கில் பக்தர்களையும், பசுக்கூடாரங்களையும் பராமரித்துக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், விலங்குகள் உரிமை ஆர்வலருமான மேனகா காந்தி, “ISKCON இந்தியாவின் மிகப்பெரிய ஏமாற்று நிறுவனம். பசுக்கூடங்களைப் பராமரிக்கும் இந்த நிறுவனம், பெரிய அளவிலான நிலங்கள் உட்பட அரசிடமிருந்து பல்வேறு பலன்களைப் பெற்றுவருகிறது. ஆந்திராவின் அனந்த்பூரில் ISKCON நிறுவனம் பராமரித்துவரும் பசுக்கூடத்துக்கு ஒரு முறை சென்றேன்.
அங்கு, பால் தராத பசுக்கள் மற்றும் கன்றுகள் எதுவுமே இல்லை. அப்படியென்றால், அவையெல்லாம் விற்கப்பட்டுவிட்டன என்று அர்த்தம். அதாவது, ISKCON தனது மாடுகளையெல்லாம் இறைச்சிக்கு விற்கிறது. ‘ஹரே ராம ஹரே கிருஷ்ணா’ என்று சாலைகளில் அவர்கள் பாடிக்கொண்டே செல்கிறார்கள். தங்களின் வாழ்நாள் முழுவதும் பாலைத்தான் நம்பியிருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் செய்யுமளவுக்கு மாடுகளை யாரும் கசாப்புக் கடைக்காரர்களுக்கு விற்கவில்லை” என்று குற்றம்சாட்டினார்.
இந்தக் குற்றச்சாட்டை மறுத்த ISKCON நிறுவனத்தின் தேசிய செய்தித் தொடர்பாளர் யுதிஷ்டிர் கோவிந்த தாஸ், “ISKCON நிறுவனம், இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் பசுக்கள் மற்றும் காளைகளின் பாதுகாப்பு, பராமரிப்பு ஆகியவற்றில் முன்னணியில் இருக்கிறது. விலங்குகள் உரிமை ஆர்வலரும், ISKCON-ன் நலன் விரும்பியுமான மேனகா காந்தியிடமிருந்து இவ்வாறான கருத்துகள் வந்திருப்பது ஆச்சர்யமளிக்கிறது. அவரின், குற்றச்சாட்டுகளின்படி கசாப்புக் கடைகளுக்கு பசுக்களோ, காளைகளோ எதுவும் விற்கப்படவில்லை. மாட்டிறைச்சி முக்கிய உணவாக இருக்கும் உலகின் பல பகுதிகளில் பசுக்களைப் பாதுகாப்பதில் ISKCON முன்னோடியாக இருக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கொல்கத்தாவின் ISKCON துணைத் தலைவர் ராதாரம் தாஸ், “மேனகா காந்தி ISKCON மீது முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருக்கிறார். இத்தகைய குற்றச்சாட்டுக்கு, அவர் விளக்கமளிக்க வேண்டும். இந்த அவதூறு ISKCON பக்தர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நலம் விரும்பிகளை மிகவும் வேதனையடையச் செய்திருக்கிறது. ISKCON-க்கு எதிரான தவறான பிரசாரத்துக்கு எதிராக, எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். எனவே, எங்கள்மீது அவதூறு பரப்பிய மேனகா காந்தி மீது ரூ.100 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருக்கிறோம். அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.