Ratham: "நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம் விஜய் ஆண்டனி சார்!" – இயக்குநர் சி.எஸ்.அமுதன்

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா, நிழல்கள் ரவி ஆகியோர் நடித்து அக்டோபர் 6-ம் தேதி வெளியாகவிருக்கும் திரைப்படம் `ரத்தம்’.

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் விஜய் ஆண்டனி, அவரது இளையமகள் லாரா, C.S அமுதன், மகிமா நம்பியார் மற்றும் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர்.

‘ரத்தம்’ பத்திரிக்கையாளர் சந்திப்பு

இவ்விழாவில் பேசிய விஜய் ஆண்டனி, “அமுதன் என் நண்பன். அவருடைய அப்பா எனக்கு மியூசிக் சொல்லிக்கொடுக்க ரொம்ப கஷ்டப்பட்டார். ஆனால், நான் மியூசிக் கற்றுக் கொள்ளாமலே சினிமாவிற்கு வந்துவிட்டேன் என்பதால் அவருக்கு என் மேலே கொஞ்சம் கோபம். அமுதன் கூட ரொம்ப நாள்களாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்று நினைத்தேன். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அது இப்போது கைகூடி இருக்கிறது.

அவரை ஒரு காமெடி பட இயக்குநராகத்தான் உங்களுக்குத் தெரியும். அதைத் தாண்டி அவருடைய வேறொரு பரிமாணம் இப்படத்தில் வெளிப்பட்டிருக்கிறது. நிச்சயம் இப்படம் வெற்றிப் படமாக அமையும். படத்தில் பணியாற்றிய படக்குழுவினர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். கூடிய சீக்கிரமே இன்னொரு படம் பண்ணுவோம் அமுதன்…” என்று பேசினார்.

இயக்குநர் சி.எஸ்.அமுதன்

இதையடுத்து பேசிய இயக்குநர் சி.எஸ்.அமுதன், “எப்போதும் படம் முடித்து பத்திரிகையாளர்களைச் சந்திப்பது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், இன்று அப்படி இல்லை. வேற வழியில்லை ‘Life has to move on’. உங்களால் சீரியஸா படம் பண்ண முடியுமா என்கிற கேள்வி என் மீது எப்போதும் இருக்கும். அதற்கான முயற்சிதான் இந்த ‘ரத்தம்’ படம். எங்க அப்பா இறந்த போது, சினிமா துறையிலிருந்து எங்க வீட்டிற்கு வந்தவர் விஜய் ஆண்டனிதான். அப்போது அவர் என்னிடம் ‘நாங்கள் எப்போதும் உன்னுடன் இருப்போம் (We are with you Amuthan)’ என்றார். அன்று அவர் எனக்குச் சொன்னதைத்தான் இன்று நான் அவருக்குச் சொல்ல ஆசைப்படுகிறேன். ‘நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம் சார் (We are with you Sir)'” என்று நெகிழ்ச்சியாகப் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.