‘சுப்பிரமணியபுரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை சுவாதி ரெட்டி .
‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘வடகறி’, ‘யட்சன்’, ‘போராளி’, ‘யாக்கை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு விகாஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் சமீபத்தில் சுவாதி ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனது கணவர் புகைப்படத்தை நீக்கி இருந்தார்.

இதனையடுத்து தன் கணவரை சுவாதி விவாகரத்து செய்ய முடிவு செய்து இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. ஆனால் இதுக்குறித்து சுவாதி ரெட்டி எந்தவிதமான விளக்கத்தையும் அளிக்கவில்லை. இந்நிலையில் சுவாதி நீண்ட நாட்களுக்கு பிறகு சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். ஸ்ரீகாந்த் நாகோடி இயக்கத்தில் ‘மந்த் ஆஃப் மது’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் நவீன் சந்திரா, ஸ்ரேயா நாவிலே ஆகியோரும் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
அதில் கலந்துக்கொண்ட சுவாதியிடம் விவாகரத்து வதந்தி குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த சுவாதி ரெட்டி, “ நான் இதற்கு பதில் சொல்ல போவதில்லை. நான் எனது சினிமா வாழ்க்கையை 16 வயதில் தொடங்கினேன். அப்போது எனக்கு எப்படி பேச வேண்டும், நடந்துகொள்ள வேண்டும் என்று தெரியாது. ஆனால் இப்போது எனக்கு பக்குவம் வந்துள்ளது.

நடக்கும் நிகழ்விற்கும், நீங்கள் கேட்கும் கேள்விக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னுடைய பர்சனல் வாழ்க்கையை பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. அதனால் உங்களின் விவாகரத்து குறித்த கேள்விக்கு பதில் அளிக்க மாட்டேன்” என்று கூறியிருக்கிறார். சுவாதி ரெட்டியின் இந்த பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.