ராசிச்சக்கரத்தில் முதல் ராசி மேஷம். அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதம் ஆகிய நட்சத்திரங்களைக் கொண்ட இந்த ராசிக்காரர்களுக்கு தற்போது ராசியிலேயே ராகு பகவான் சஞ்சாரம் செய்துவருகிறார். வரும் 8.10.23 அன்று பிற்பகல் 3மணி 36 நிமிடத்திற்கு ராகு பகவான் உங்கள் ராசியை விட்டு நகர்ந்து மீன ராசிக்குள் சஞ்சாரம் செய்யப்போகிறார். அப்போது இதுவரை ஏழாம் வீடான துலாம் ராசியில் சஞ்சரித்துவந்த கேது பகவான் கன்னி ராசிக்கு அடி எடுத்துவைக்கிறார். இந்த கிரக மாற்றம் 26.4.25 வரை நீடிக்க இருக்கிறது. இந்த பெயர்ச்சி அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேஷ ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை வழங்க இருக்கிறது என்பதைக் காண்போம்.
12 ல் ராகு தரும் பலன்கள்:
இதுவரை ராசியில் அமர்ந்து உங்களை மிகுந்த மன அழுத்ததுக்கு ஆளாக்கிய ராகு பகவான் ராசியை விட்டு நகர்வதால் மனதில் நிம்மதி பிறக்கும். உடலில் இருந்த ஆரோக்கியக் கோளாறுகள் படிப்படியாக நீங்கும். அழகும் பொலிவும் கூடும். எப்போதும் ஏதோ ஒரு விரக்தி மன நிலையில் இருந்தீர்களே அந்த நிலை மாறும். உங்களுக்கு ஏற்பட்டிருந்த தர்ம சங்கடங்கள் விலகும். நண்பர்களும் உறவினர்களும் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள் தேடிவந்து உறவு பாராட்டுவார்கள்.
வீட்டில் சுபகாரியத் தடைகள் ஏற்பட்டுவந்ததே அந்த நிலை மாறும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த விரிசல்கள் விலகி அந்நியோன்யம் ஏற்படும். பணவரவில் இருந்த கெடுபிடிகள் எல்லாம் மாறும். தாராளமாகப் பணம் வரும். வெளிநாடு செல்லத் திட்டமிட்டு விசா பிரச்னையால் செல்லமுடியாமல் தவிர்த்தீர்களே இனி வெளிநாடு செல்லும் யோகம் தேடிவரும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும் பல புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பல நாள் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.
ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் காலமான 8.10.23 முதல் 15.6.24 வரை சின்னச் சின்னத் தொந்தரவுகள் இருக்கும். பழைய வாகனம் செலவு வைக்கும். புதிய வாகனம் வாங்கும் வகையிலும் செலவு உண்டாகும். பணவரவுக்கு ஏற்ப செலவுகள் இருக்கும் என்பதால் அவற்றை நல்ல சுபசெலவுகளாக மாற்றிக்கொள்வது நல்லது. வழக்கு விஷயங்களில் வழக்கறிஞரின் யோசனை அவசியம்.
ராகு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் 15.6.24 முதல் 22.2.25 வரையிலான கால கட்டத்தில் சின்னச் சின்னக் குழப்பங்கள் வந்து நீங்கும். அனைத்து செயல்களிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பழைய கடன் விஷயங்களில் எச்சரிக்கை தேவை.
ராகுபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் 22.2.25 முதல் 26.4.25 வரையிலான காலகட்டத்தில் சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். விஐபிக்கள் நண்பர்கள் ஆவார்கள். மகன் அல்லது மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். வீடு கட்டும் பணியினை விரைந்து முடிப்பீர்கள். அதற்கு வங்கிக் கடன் உதவி, அப்ரூவல் ஆகியன கிடைக்கும். பூர்விக சொத்திலிருந்த வில்லங்கள் விலகி பாகப்பிரிவினை சுபமாக முடியும்.
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாம் இடமான துலாமில் அமர்ந்து குடும்பத்தில் தேவையற்ற பிரச்னைகளைத் தந்துவந்த குருபகவான் தற்போது ஆறாம் இடமான கன்னிக்கு வருகிறார். இதனால் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். பிரச்னைகள் விலகி ஓடும். பண வரவு பெருகும். கணவன் மனைவிக்கும் அந்நியோன்யம் அதிகரிக்கும். அவர்களுக்கு இடையே இருந்த விரிசல் விலகும். புதிய சொத்து வாங்கும் பாக்கியம் உண்டாகும். மேலும் 1.5.24 முதல் குருபகவான் கேதுவைப் பார்க்க இருப்பதால் அனைத்தும் சாதகமாகும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். வழக்குகளில் எதிர்பார்த்த நல்ல தீர்ப்பு வந்து சேரும். என்றாலும் செலவுகள் அதிகரிக்கும் என்பதால் சிக்கனம் தேவை.
சித்திரை நட்சத்திரத்தில் கேதுபகவான் 8.10.23 முதல் 11.2.24 வரை சஞ்சரிக்கும் காலகட்டத்தில் கௌரவப் பதவிகள் தேடிவரும். பணவரவு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும். சகோதர உறவுகள் தேடிவந்து உதவுவார்கள்.
கேதுபகவான் அஸ்தம் நட்சத்திரத்தில் 11.2.24 முதல் 19.10.24 வரை சஞ்சாரம் செய்யும் காலகட்டத்தில் புகழ், செல்வாக்கு, கௌரவம் ஆகிய உயரும். பங்குச் சந்தை பலன் தரும். வீடு மனை வாங்கும் யோகம் வாய்க்கும். அரசுக் காரியங்கள் அனுகூலமாகும்.
கேதுபகவான் உத்திரம் நட்சத்திரத்தில் 19.10.24 மதல் 26.04.25 வரை சஞ்சரிக்கும் காலத்தில் மனதில் விரக்தி தோன்றி மறையும். தேவையற்ற படபடப்பும் குழப்பமும் ஏற்படும். இந்தக் காலகட்டத்தில் உணர்ச்சி வசப்பட்டுப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது.
வியாபாரம்:
வியாபாரத்தில் இருந்த தேக்கநிலை மாறும். உற்சாகமாச் செயல்படுவீர்கள். முதலீடு செய்ய உரிய பண உதவி கிடைக்கும். போட்டியாளர்களை எளிதாக வெல்வீர்கள். ஏற்றுமதி இறக்குமதித் தொழிலில் இருப்பவர்களுக்குக் கூடுதல் வருமானம் வந்து சேரும். இதுவரை தொல்லை தந்த பணியாளர்களை மாற்றுவீர்கள். கூட்டுத்தொழில் லாபம் தரும். பங்குதாரர்களிடம் ஏற்படும் வாக்குவாதங்களைப் பெரிது படுத்தாதீர்கள்.
உத்தியோகம்:
அலுவலகத்தில் எது செய்தாலும் உரிய மரியாதை கிடைக்காமல் இருந்த நிலை மாறும். உயர் அதிகாரிகளின் அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு தேடிவரும். புதிய வேலை வாய்ப்புகள் தேடிவரும். வெளிநாட்டு வேலைக்காகக் காத்திருந்தவர்களுக்கு அந்த வாய்ப்பு தேடிவரும். கலைஞர்களுக்குப் பேரும் புகழும் கிடைக்கும். வரவேண்டிய சம்பள பாக்கி கைக்குவரும்.
இந்த ராகு – கேது மாற்றம் உங்களுக்குப் புத்துணர்ச்சி தந்து வாழ்வில் ஒருபடி முன்னேற வைக்கும்.
பரிகாரம்:
வேலூர், வாணியம்பாடிக்கு அருகில் ஆம்பூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅபயவல்லி சமேத ஸ்ரீநாகரத்தின சுவாமியை வணங்குங்கள். கட்டடத் தொழிலாளர்களுக்கு உதவுங்கள். வெற்றிகள் தொடரும்.