புதுடெல்லி: அரசே அனைத்தையும் செய்யும் என்று எண்ணக்கூடாது; சமுதாயத்தின் சக்தி மிகப் பெரியது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை ஒன்றிய அளவில் சிறப்பாக நடைமுறைப்படுத்தும் நோக்கில் ஆர்வத்தில் உறுதி (சங்கல்ப் சப்தா) என்ற திட்டம் மத்திய அரசால் கடந்த ஜனவரி 7ம் தேதி நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. இதற்காக, நாடு முழுவதிலும் இருந்து 500 ஒன்றியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்நிலையில், இந்த திட்டத்தை வரும் அக்டோபர் 3ம் தேதியில் இருந்து 9ம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு சிறப்பு கவனத்துடன் அமல்படுத்தப் போவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி இதனை தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “இதற்கு முன் மாவட்ட அளவில் இதுபோன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 112 மாவட்டங்களில் நடத்தப்பட்ட இத்தகைய நிகழ்ச்சிகளின் மூலம் 25 கோடி மக்கள் பயனடைந்தார்கள். அது மிகவும் வெற்றிகரமாக அமைந்தது. அதேபோல், தற்போது ஒன்றிய அளவில் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டள்ளது. இதுவும் வெற்றிகரமாக நடைபெறும் என நம்புகிறேன்.
ஒருங்கிணைந்த இந்தியாவின் வெற்றி இது. ஒவ்வொருவரின் முயற்சிதான் இதன் அடையாளம். இந்தியாவின் எதிர்காலத்திற்கு இந்த திட்டம் மிகவும் முக்கியம். மாவட்ட அளவில் திட்டங்களின் செயல்பாட்டை மேம்படுத்தும்போது ஒட்டுமொத்த மாவட்டமும் பயன்பெறுவதில்லை. அதிக எண்ணிக்கையில் மக்கள் பலனடைந்திருக்கலாம். ஆனால், ஒன்றிய அளவில் நடைபெறும் பணிகள் கீழ் மட்டம் வரை சென்று தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. எனவே, கீழ்மட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட இந்த திட்டம் மிகவும் முக்கியம்.
2047க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும். வளர்ந்த இந்தியா என்பது மாநகரங்களின் வளர்ச்சியோடு நின்றுவிடக்கூடாது. வளர்ச்சியில் இருந்து நமது கிராமங்கள் விடுபட்டுவிடக்கூடாது. 140 கோடி மக்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய மாற்றமே நமக்குத் தேவை. ஒன்றிய அளவில் பணிகளை சிறப்பாக மேற்கொள்பவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும். மத்திய மாநில அரசு அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்த வேண்டும். மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய குழுக்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
அரசே அனைத்தையும் செய்யும் என்ற எண்ணத்தில் இருந்து நாம் வெளிவர வேண்டும். சமூகத்தின் சக்தி மிகப் பெரியது. ஒன்றிய அளவிலும் மாவட்ட அளவிலும் நாம் விரைவாக வெற்றியை எதிர்பார்க்கலாம் என்பது எனது அனுபவம். சுற்றுச்சூழல் சார்ந்த முன்னெடுப்புகளும் தூய்மை இந்தியா முன்னெடுப்புகளும் இதனால்தான் வெற்றி பெற்றுள்ளன. மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பணம் ஒதுக்குவது அவசியம் அல்ல. நாம் நமது வளத்தை சிறப்பாக பயன்படுத்தியே சிறப்பான முன்னேற்றத்தை ஏற்படுத்தலாம். நல்ல அரசு நிர்வாகம் என்பது இலக்குகளை அடைவதில்தான் உள்ளது” என தெரிவித்தார்.