சென்னை: ஒவ்வொரு மனிதரையும் இயக்கும் சக்தியாக அவரது சிந்தனையே விளங்குகிறது. எப்போதும் நற்சிந்தனைகளுடன் இருக்கும் ஒருவர், நல்லதை மட்டுமே செய்வார். ஒருவருக்கு நற்சிந்தனை வரவேண்டுமெனில், அவரது எண்ணங்களை நெறிப்படுத்தி, வளப்படுத்தி, ஒருமுகப்படுத்துவதே ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கு வழிவகுக்கும். இதைத்தான் நம் முன்னோர்கள், ‘‘நல்லதையே நினைத்தால் நல்லதே நடக்கும்’’ என்றனர்.
சிறுவயதில் தாயின் மூலம் நற்சிந்தனையை பெறுகிறோம். யாருக்கும் ஒருபோதும் தீங்கிழைக்க கூடாது. நல்லவர்களோடு பழக வேண்டும். நல்லவற்றையே பேச வேண்டும். நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும். நல்லவை நடைபெறும்போது தானும் இணைந்துகொள்வதோடு, பலரையும் ஒன்றாக இணைத்து செயலாற்ற வேண்டும். உயர்ந்த சிந்தனைகளே வாழ்வில் நம்மை உயர்த்தும் படிக்கட்டுகளாக அமைகின்றன. ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்பதுவள்ளுவ பேராசானின் வாக்காகும்.
இன்றைக்கு உலகம் முழுவதும் தீய சக்திகளும், தீய எண்ணங்களும், மனதை மயக்கும் காட்சிகளும், வன்முறையை தூண்டும் திரைப்படங்களும், பிறர் மீது வெறுப்பை தூண்டும் பேச்சுகளும் பரவிக் கிடக்கின்றன. மனதில் உள்ள காழ்ப்புணர்ச்சி, ஆணவம் போன்ற தீய எண்ணங்களையும் நாம் கடந்துவர வேண்டியுள்ளது. அப்படியான நேரங்களில் மனதை ஒருமுகப்படுத்தும் வகையில் விவேகானந்தர், அன்னை சாரதாதேவி, ராமகிருஷ்ண பரமஹம்ஸர், வேதாத்ரி மகரிஷி, பகவான் ரமணர், வள்ளலார் போன்றோர் அறிவுறுத்திய நற்சிந்தனைகளை எண்ணிப் பார்க்க வேண்டும். யோகா போன்ற சிறப்பு பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
நற்சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள நற்சிந்தனைகளை போற்றும் நிகழ்ச்சிகளை நடத்துவதும், நற்செயல்கள் செய்வோரை ஊக்கப்படுத்துவதும் அவசியமாகிறது. இன்றைய சமுதாய சூழலில் சில முன்னோடி மாணவர்கள் சமுதாயத்துக்கு நன்மையை உண்டாக்கும் நல்ல பல செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தகைய மாணவர்களை, பலரும் அறியும் வகையில்பொதுவெளியில் அறிமுகம் செய்ய இருக்கிறோம். இது பிற மாணவர்களையும் ஊக்குவிப்பதாக அமையும்.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘வாக்கரூ’ நிறுவனத்துடன் இணைந்து, மாணவ சமுதாயத்தின் நலன் கருதி, ‘நற்சிந்தனை -நன்னடை’ எனும் சிறப்புமிகு நிகழ்வை முன்னெடுக்க உள்ளது. ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் இதுதொடர்பான விவரங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. தொடர்ந்து படியுங்கள்.