இந்த உலகக் கோப்பையை ஆளப்போகும் 5 ஸ்பின்னர்கள் இவர் தான்… எழுதி வச்சுக்கோங்க!

ICC World Cup 2023, Spinners: உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் நேற்றே தொடங்கிவிட்டன. அனைத்து அணிகளும் தங்களின் பலத்தை நிரூபித்து இந்த உலகக் கோப்பையை முத்தமிட தயாராகி வருகின்றன. இந்த தொடர் முழுக்க இந்திய மண்ணில் நடைபெற இருக்கும் நிலையில், தொடரில் சுழற்பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் தான் அதிகம் இருக்கும் என்பதை கண்ணை முடிக்கொண்டு யார் வேண்டுமானாலும் சொல்லி விடுவார்கள் எனலாம். 

குறிப்பாக, வரும் உலகக் கோப்பை தொடரில் (ICC World Cup 2023) அதிக விக்கெட்டுகளை கைப்பற்றவும், வேகப்பந்துவீச்சாளர்களை விட சுழற்பந்துவீச்சாளர்களுக்கு தான் அதிகம் உள்ளது. முன்னர் எல்லாம், சுழற்பந்துவீச்சு என்பது துணை கண்டத்தில் உள்ள அணிகளுக்கு மட்டுமே கைவந்த கலையாக கருதப்பட்டது. சுழற்பந்தை வீசுவதாகட்டும், சுழற்பந்தை எதிர்கொள்வதாகட்டும் மற்ற அணி வீரர்களை விட துணை கண்ட அணிகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட அணிகள் தான் அதில் சிறந்து விளங்கின. 

ஆனால், தற்காலத்தில் சுழற்பந்துவீச்சு பரவலாகிவிட்டது. அதனை எதிர்கொள்ளவும் பல பேட்டர்கள் தற்போது உருவெடுத்துவிட்டனர். குறிப்பாக, துணை கண்ட அணிகளை விட மற்ற அணிகள் சுழற்பந்துவீச்சில் வல்லவர்களாக திகழ்கின்றனர். ஒவ்வொரு அணியும் தற்போது தங்களின் பிளேயிங் லெவனில் இரண்டு முழு நேர சுழற்பந்துவீச்சாளர்கள், 1 பகுதிநேர சுழற்பந்துவீச்சாளரை வைத்துக்கொள்ளும் அளவிற்கு வந்துவிட்டது. முன்னர் கூறியது போல், இந்திய மண்ணில் நடப்பதால் அவர்கள் தான் வரும் உலகக் கோப்பையையே ஆட்டுவிக்கும் சக்தியாக இருப்பார்கள். பனிப்பொழிவு பெரிதாக இருக்காது என கூறப்படுவதும் சுழற்பந்துவீச்சுக்கு கூடுதல் சாதகம்தான். 

அந்த வகையில், இந்த தொடரில் ஆதிக்கம் செலுத்த இருக்கும் டாப் 5 சுழற்பந்துவீச்சாளர்கள் (ICC World Cup Top 5 Spinners) யார் என்றும், அவர்களின் சமீபத்திய செயல்பாடுகள் குறித்தும் இதில் காணலாம். இந்த 5 வீரர்கள் மற்றவர்களை விட அதிக ஆதிக்கம் செலுத்த வாய்ப்பிருப்பதாகவும் வல்லுநர்கள் கருதுகின்றனர், அதன் அடிப்படையில் இந்த பட்டியல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

5. மகேஷ் தீக்ஷனா

இலங்கை அணியின் ஆஸ்தான சுழற்பந்துவீச்சாளராக இருந்த ஹசரங்கா காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகிய நிலையில், தற்போது அந்த அணியின் நம்பிக்கை முழுவதும் மகேஷ் தீக்ஷனாவின் (Maheesh Theekshana) மேல் மாறியுள்ளது. ஆசிய கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட வெல்லலகேவும் அணியில் இருந்தாலும், தீக்ஷனாவின் வேரியேஷன்ஸ் அவரை இன்னும் ஒரு படி மேல கொண்டு செல்கிறது. 

மேலும், தீக்ஷனாவால் முதற்கட்ட ஓவர்களில் இருந்து கடைசி கட்டம் வரை எந்த ஓவரிலும் வீச முடியும். இதுபோன்று, ஒருநாள் அரங்கில் பந்துவீசக்கூடிய ஸ்பின்னர் என்று யாரையும் டக்கென்று விரல் நீட்டி சொல்ல முடியாது, இது தீக்ஷனாவின் கூடுதல் சிறப்பு. ஐபிஎல் தொடரிலும் நல்ல விளையாடியுள்ள இவர் இலங்கைக்கு துருப்புச்சீட்டமாக இருப்பார். இவர் 27 இன்னிங்ஸில் 44 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

4. குல்தீப் யாதவ்

வரும் உலகக் கோப்பை அணிக்குள் அஸ்வின் வருவதற்கு முன்னும், பின்னும் இந்தியாவின் அசைக்க முடியாத ஸ்பின்னராக உருவெடுத்திருப்பவர் குல்தீப் யாதவ் (Kuldeep Yadav). இடதுகை சைனாமேன் ஸ்பின்னரான இவர் தனது பந்துவீச்சு முறையில் பல மாற்றங்களை செய்து, அதில் வெற்றிகரமான பல ரிசல்ட்டையும் பார்த்துள்ளார். ஆசிய கோப்பையில் பல முக்கிய விக்கெட்டுகளை குல்தீப் யாதவ் வீழ்த்தி, தனது தேவையை அவர் நிரூபித்திருந்தார். இடதுகை பேட்டர், வலதுகை பேட்டர் என இரு தரப்புக்கும் இவர் நெருக்கடி தர வல்லவர் என்பது கூடுதல் சிறப்பு. 

3. இஷ் சோதி

நியூசிலாந்து வீரரான இஷ் சோதி (Ish Sodhi) இந்தியாவில் எப்போதுமே நன்றாக பந்துவீசியுள்ளார். 2023ஆம் ஆண்டில் மட்டும் 12 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியிருக்கிறார். மிடில் ஓவர்களில் அனைத்து வலிமைமிக்க அணிகளும் தலைவலி கொடுக்க வல்லவர். நியூசிலாந்தை அரையிறுதிக்கு அழைத்துச்செல்வதில் சோதியின் பங்கு அதிகம் இருக்கும்.

2. ஆடம் ஸாம்பா

ஒருநாள் தரவரிசையில் ஏழாவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் முக்கிய ஸ்பின்னர் ஆடம் ஸாம்பா (Adam Zampa). தங்கள் கூட்டாளர் ஆஷ்டன் ஆகார் இல்லாத நிலையில், மேக்ஸ்வெல் உடன் சேர்ந்து எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க ஸாம்பா தயாராகி வருகிறார். லெக் ஸ்பின்னர்கள் தான் இன்றைய லிமிடெட் ஓவரில் அதிக முக்கியத்துவம் பெறும் ஸ்பின்னர்களாக மாறிவிட்டனர். அவர்களின் கூக்ளி மற்றும் ஸ்டாக் பால் போன்ற வேரியேஷன்களை சரியாக பயன்படுத்தினால் அவர்கள் தான் அன்றைய தினத்தின் ராஜா. எனவே, உலகத் தர லெக் ஸ்பின்னரான ஸாம்பா ஒட்டுமொத்தமாக அதிக விக்கெட்டைகளை வீழ்த்த வாய்ப்புள்ளது.  

1. ரஷித் கான்

முஜிபூர் ரஹ்மான் ஒருநாள் தரவரிசையில் ரஷித் கானை (Rashid Khan) விட ஒருபடி முன்னிலையில் உள்ளார். இருப்பினும், ரஷித் கான் ஏன் முக்கியத்துவம் பெறுகிறார் என்றால், இந்திய மண்ணில் அவருக்கு அனுபவம். ரஷித் கான் லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டில் தொடர்ந்து செலுத்தும் ஆதிக்கமானது யாராலும் ஈடுகட்ட முடியாத ஒன்றாக உள்ளது. ஆப்கானிஸ்தான் சென்னை, பெங்களூரு என சுழற்பந்துவீச்சு சாதகமாக உள்ள மைதானங்களில் அதிக போட்டிகளை விளையாட இருப்பதால் ரஷித் கானுக்கு ராஜ வேட்டை காத்திருக்கிறது. கண்டிப்பாக, ஒரு பெரிய அணியை ஆப்கானிஸ்தான் இந்த தொடரில் வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் ரஷித் கானின் பங்கு தவிர்க்க இயலாதது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.