'இயற்கை விவசாயத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?' எம்.எஸ்.சுவாமிநாதன் அளித்த பேட்டி!

இந்திய விவசாயத் துறையில் தவிர்க்க முடியாத பெயர் மான்கொம்பு சாம்பசிவம் சுவாமிநாதன். சுருக்கமாக எம்.எஸ்.சுவாமிநாதன். தன்னுடைய 98-வது வயதில் செப்டம்பர்.28 அன்று இயற்கை எய்தினார். இந்திய விவசாயம், இயற்கை விவசாயம், பசுமைப் புரட்சி என்று பலவற்றைப் பற்றியும் 2015-ம் ஆண்டு பசுமை விகடன் இதழுக்காக பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியின் ஒரு பகுதி அவர் காலமான அன்று வெளியானது. அதன் மற்றொரு பகுதி இங்கே இடம் பெறுகிறது.

எம்.எஸ்.சுவாமிநாதன்

இயற்கை விவசாயத்தைப் பற்றிய உங்கள் பார்வை என்ன? இயற்கைபாதி, செயற்கைபாதி என்று நீங்கள் அவ்வப்போது சொல்லி வருகிறீர்கள்… இது சரியான நடவடிக்கையா?

“இயற்கை உரங்களையும், கனிம (ரசாயன) உரங்களையும் ஒன்றுக்கொன்று எதிரானவை எனப் பார்க்கக்கூடாது. இயற்கை இடுபொருள்கள், மண்ணின் உயிரித்தன்மையை அதிகப்படுத்துகின்றன. கனிம உரங்கள் பௌதீக, வேதித் தன்மையை அதிகப்படுத்துகின்றன. ஆனால், கனிம உரங்களால் நுண்ணூட்டச் சத்துக்களைக் கொடுக்க முடிவதில்லை. இதனால் மண்ணில் நுண்ணூட்டச் சத்துக்களை அதிகப்படுத்த, குறைந்தளவு கனிம உரங்களோடு பயோ உரங்களையும் (இயற்கை உரங்கள்), தொழுவுரத்தையும் கலந்துகொடுப்பது சிறந்த முறை. இதில் பசுந்தாள் பயிர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். இதோடு நைட்ரஜன் சத்துக்களைக் கொடுக்கக்கூடிய பயறு வகைகளையும் சேர்க்கலாம். இப்படிக் கலந்து செய்யும் முறையே சரியான விவசாயம்.”

நெல்சன் மண்டேலாவுடன் எம்.எஸ்.சுவாமிநாதன்

விவசாயக் கடன் தள்ளுபடியை எதிர்ப்பது ஏன்? அரசியல்வாதிகளால் விவசாயிகளுக்கு எளிமையாகச் செய்யக்கூடியது அது ஒன்றுதான், அதையும் தடுக்கிறீர்களே?

“விவசாயக் கடன் தள்ளுபடியை தற்போது ஆதரிக்கிறேன். இலவச மின்சார மானியத்தை மிகவும் கவனமாகச் செயல்படுத்த வேண்டும். இலவச மின்சாரத்தை வைத்து பம்ப்செட்கள் மூலம் நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சுவதற்கு வாய்ப்புள்ளது. தேசிய விவசாயிகள் ஆணையத்தின் தலைவராக இருந்தபோது விவசாயிகளிடம் கலந்துரையாடினேன். அப்போது, அவர்கள் எல்லோரும் கூறிய ஒருமித்த கருத்து என்னவென்றால்… ‘இலவச மின்சாரம் வேண்டாம். நிலையான மற்றும் நம்பத்தகுந்த மின்சாரத்தை தினமும் வழங்க வேண்டும்’ என்பதுதான்.”

இந்திய விஞ்ஞானிகள், ரசாயன விவசாயமும், மரபணு மாற்றப்பட்ட விதைகளும் அவசியம் என்றே நினைக்கிறார்களா?

“மாற்றம் உருவாவதற்கு அறிவியல் முதல் முன்னோடியாக இருந்து வருகிறது. நவீன வேளாண்மையில் நிலம், நீர், பல்லுயிர் பரவல், பருவநிலை மாற்றம் என பல சவால்கள் உள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள இத்தகைய சவால்களை முறியடிக்க விஞ்ஞானத்தை நாம் பயன்படுத்துவது அவசியம். அதைத்தான் விஞ்ஞானிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.”

எம்.எஸ்.சுவாமிநாதன்

ஒரு தாவரத்தின் மரபணுத் தன்மையை மாற்றுவது இயற்கைக்கு எதிரானது இல்லையா?

“மரபணு மாற்றங்கள் குறித்த எனது கருத்து அனைவரும் அறிந்ததே. மரபணு மாற்றங்களால் ஏற்படும் சாதகம் மற்றும் பாதகங்களை வெளிப்படையாகவும், உண்மையாகவும் அளவிட, தேசிய உயிரியல் பாதுகாப்பு ஆணையம் அமைக்க வேண்டும். இதன்மூலம் பொதுமக்கள், அரசியல் சார்ந்தோர், படித்தவர்கள் மற்றும் ஊடகங்களுக்கிடையே, மரபணு மாற்றத்தைப் பற்றிய ஒருமித்த கருத்தைக் கொண்டுவர முடியும் என்று நம்புகிறேன்.”

மரபணு மாற்றுப் பயிர்கள் வேண்டுமா… வேண்டாமா?

“மரபணு மாற்றுப் பயிர்களின் காலம் முடிந்துவிட்டது. ஆனால், நமக்கு தேவையான குணாதிசயங்கள் கொண்ட பயிர்களை உருவாக்க மரபணுத் தொழில்நுட்பம் தேவை. அந்த டி.என்.ஏ. தொழில்நுட்பம் நம் நாட்டுக்குத் தேவை என்றே நம்புகிறேன்.”

எம்.எஸ்.சுவாமிநாதன்

இயற்கை விவசாயத்தில் பல விவசாயிகள் நல்ல மகசூல் எடுத்து வருகிறார்கள். அதற்கு சாட்சி ‘பசுமை விகட’னில் வரும் விவசாயிகள். இனியாவது அரசாங்கத்திடம் இயற்கை விவசாயத்துக்கு தனி ஒரு அந்தஸ்தை கொண்டுவர வலியுறுத்துவீர்களா?’

“இயற்கை விவசாயத்தில் பல நன்மைகள் உள்ளன. அதனால் காய்கறிகள், பழங்கள் மற்றும் மூலிகைகள் சாகுபடிக்கு இயற்கை விவசாயம் பயன்படுத்துவதே நல்லது. பூச்சித்தாக்குதல்களும் குறைந்து, சமரசம் செய்யாமல் விளைச்சலும் கிடைக்குமானால் இயற்கை விவசாயம் நல்லதுதான். எனவே, நமது விவசாயிகளுக்கு வேளாண் துறையில் உள்ள விரிவாக்கப் பணியாளர்கள் இயற்கை விவசாயத்தைக் கற்றுத் தர வேண்டும். இதுபோன்ற விஷயங்களை ஆதரிக்கிறேன்.”

‘நாட்டின் சில பாகங்களில் இயங்கி வரும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையங்கள் மூலம் சிறுதானியங்களை பயிர் செய்ய ஊக்கப்படுத்தி வருகிறீர்கள். அதை அரசு மூலமாகவே பெரிய அளவில் செய்ய வலியுறுத்தலாமே?’

எம்.எஸ்.சுவாமிநாதன்

“1992-ம் ஆண்டு எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் கொல்லிமலையில் சிறுதானியங்கள், பயறு வகைகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டோம். ஏனென்றால், இந்தப்பயிர்கள் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், மாறி வரும் தட்பவெப்ப சூழ்நிலைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையிலும் இருப்பதுதான். அப்போதிருந்தே நாங்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு பயறு வகை மற்றும் சிறுதானியப் பயிர்களை பொது விநியோகத் துறையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்து வருகிறோம்.

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ன் கீழ் சிறுதானியப் பயிர்களை, கொள்முதல் மற்றும் விநியோகத் துறையில் இணைத்தேன். ஏற்கெனவே, கர்நாடகா அரசு கேழ்வரகை பொது விநியோகத்துறை மூலம் மக்களுக்கு அளித்து வருகிறது. இனிவரும் ஏதாவது ஒரு ஆண்டை சர்வதேச சிறுதானியப் பயிர்கள் ஆண்டாக அங்கீகாரம் அளிக்க வேண்டும் என பரிந்துரை செய்திருக்கிறோம். இதுபோன்ற செயல்கள் மூலம் சிறுதானியங்களுக்கு ஆதரவளித்துக் கொண்டுதான் வருகிறோம்.”

இளைஞர்களை விவசாயத்தை நோக்கி இழுக்க என்ன செய்ய வேண்டும்?

“பொருளாதார ரீதியில் வருமானம் கொடுப்பதாகவும், தனிப்பட்ட முறையில் மனதுக்கு திருப்தி அளிப்பதாகவும் விவசாயம் இருந்தால் மட்டுமே இளைஞர்கள் ஈடுபட முன்வருவார்கள். புதிய தொழில்நுட்பங்களான தகவல் தொழில்நுட்பங்களை விவசாயத்தில் பயன்படுத்த வேண்டும். அத்தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்குத் தேவையான தகவல்களைச் சரியான இடத்தில், சரியான நேரத்தில் தருகின்றன. பருவமழையும், சந்தையும் விவசாயிகளின் வளர்ச்சியை நிர்ணயிக்கும் காரணிகளாக விளங்குகின்றன.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியுடன்

பருவமழையைத் தக்க முறையில் பயன்படுத்திக் கொள்வதும், விளைபொருள்களுக்கு சந்தையை நிறுவுவதும் புதிதாக விவசாயம் செய்யவரும் இளைஞர்களுக்கு மிகவும் முக்கியம். அவர்களின் கல்வி மற்றும் திறனைப் பயன்படுத்தி, வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய வகையில் விவசாயம் இருந்தால் மட்டுமே வளர்ச்சியடையக் கூடும். தொழிற்சாலைகளால் தர இயலாத வேலை வாய்ப்பை, விவசாயம் மட்டுமே தர முடியும். அதிக மக்கள்தொகை கொண்ட நம் நாட்டில் வேளாண்மை, கால்நடைத் துறை, கடல் மற்றும் நன்னீர் மீன் வளர்ப்பு, வனம் மற்றும் வேளாண் காடுகள், வேளாண் பொருள்களைப் பதப்படுத்துதல் ஆகிய துறைகளில் இளைஞர்களுக்கு அதிகப்படியான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரமுடியும்.”

எம்.எஸ்.சுவாமிநாதன்

தேசிய விவசாயிகளுக்கான கொள்கை

தேசிய விவசாயிகள் ஆணையத்தின் தலைவராக இருந்தபோது எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான கமிட்டி அளித்த பரிந்துரைகள் அனைத்தும் ‘தேசிய விவசாயிகளுக்கான கொள்கை’ என்ற பெயரில், நாடாளுமன்றத்தில் 2007-ம் ஆண்டு சமர்பிக்கப்பட்டன. அவற்றில் சில பகுதிகள் இங்கே…

வேளாண் அமைச்சகம் என்ற பெயரை ‘விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல அமைச்சகம்’ என மாற்றி அமைக்க வேண்டும். காரணம் விவசாயிகளின் நலனை அவர்கள் முன் வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் (தற்போது மத்திய அரசால் வேளாண் அமைச்சகத்தின் பெயர், ‘விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல அமைச்சகம்’ என்று மாற்றப்பட்டுள்ளது).

இந்தியாவுக்கென பிரேத்யகமான ஒரு சந்தையை நிறுவுவதன் மூலம் தங்களது விளைபொருட்களை எந்தத் தடையுமின்றி கொண்டு செல்ல முடியும்.

விவசாயிகளுக்கு 4 சதவிகித வட்டிக்குக் கடன் தருதல்.

விவசாயத்தில் ஏற்படும் சிக்கல்களை சரிசெய்ய நிதி, வேளாண் காப்பீட்டுத் தொகையை விரிவுபடுத்துதல்.

எம்.எஸ்.சுவாமிநாதன் பவுண்டேஷனில் நடைபெற்ற நிகழ்வில்

விவசாயம் செய்ய முடியாமல் மிகவும் பாதிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் கடன்களை தள்ளுபடி செய்தல்.

கொள்முதல் மற்றும் பொது விநியோக முறையை பலப்படுத்துவதன் மூலம் உறுதியான லாபகரமான சந்தை வாய்ப்பை ஏற்படுத்துதல்

குறைந்தபட்ச உத்தரவாத விலை என்பது உற்பத்திச் செலவுடன் 50 சதவிகிதம் வரை கிடைக்க வேண்டும்.

இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தி, இயற்கை விவசாயப் பகுதிகளை உருவாக்குதல். அப்பகுதிகளில் சிறு விவசாயிகள் இயற்கை விவசாயப் பண்ணைகளை ஊக்குவித்தல்.

விவசாயிகளின் உண்மையான வளர்ச்சியை அவர்களது நிகர லாபத்தை வைத்து அளவிட வேண்டுமேயன்றி, அவர்கள் பெற்ற மொத்த விளைச்சலை வைத்து அளவிடக் கூடாது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.