இருமாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி காவிரி விவகாரத்தில் தீர்வு காண வேண்டும்: நடிகர் சிவராஜ்குமார் பேச்சு

பெங்களூரு:

கன்னட திரைப்பட வர்த்தக சபை சார்பில் காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தை ஆதரித்து போராட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது.

இதில் நடிகர் சிவராஜ்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

நடிகர் சித்தார்த் தனது படம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். அங்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அந்த கூட்டம் நிறுத்தப்பட்டது. இதற்காக சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனி இதுபோல் நடைபெறாது. நாம் செய்யும் செயல்கள் மற்றவர்களை காயப்படுத்தக்கூடாது.

சித்தார்த்திற்கு நடந்தது தவறு. யாரும் இவ்வாறான செயலில் ஈடுபடக்கூடாது. கன்னடர்கள் எல்லோரையும் அன்பு, நம்பிக்கையால் பார்ப்பவர்கள், ஒவ்வொருவரையும் வரவேற்பவர்கள் என்ற மனநிலை உள்ளது. அதற்கு நாம் குந்தகம் ஏற்படுத்தக்கூடாது. காவிரி பிரச்சினை புதிது ஒன்றும் இல்லை. நாம் அப்போது இருந்தே போராடி வருகிறோம். இந்த பிரச்சினை எங்கு உள்ளது?, இந்த பிரச்சினையை உருவாக்குபவர்கள் யார்?, இதற்கு தீர்வு கிடைக்காதது ஏன்? என்பது குறித்து நேர்மையான முறையில் நாம் பார்க்க வேண்டும்.

எந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களும் விவசாயிகளே. அதில் பாகுபாடு பார்க்கக்கூடாது. இரண்டு மாநில அரசுகளும் உட்கார்ந்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை தீர்த்துக்கொள்ள வேண்டும். திரை கலைஞர்கள் போராட்டத்திற்கு வருவது என்று சொல்கிறீர்கள். நாங்கள் வந்து என்ன செய்ய வேண்டும்?. நாங்கள் வந்து நின்று கொள்கிறோம். என்ன ஆகிறது என்று சொல்லுங்கள். நாங்கள் வந்து பேசிவிட்டு சென்றால் பிரச்சினை தீர்ந்துவிடுமா?.

இவ்வாறு சிவராஜ்குமார் பேசினார்.

நடிகர் உபேந்திரா பேசுகையில், காவிரி நதிநீர் பிரச்சினை தான் இதுவரை தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளது. நாம் அனைவரும் புத்திசாலிகள். சிந்திக்கும் ஆற்றல் நமக்கு உண்டு. அதை பயன்படுத்தி இந்த பிரச்சினைக்கு நாம் தான் தீர்வு காண வேண்டும். இந்த பணியை இருமாநிலங்களும் செய்ய வேண்டும் என்றார்.

நடிகை பூஜாகாந்தி பேசுகையில், காவிரி விவகாரத்தில் கர்நாடக மக்கள் பொறுமையுடனும், சகிப்புத்தன்மையுடனும் செயல்பட்டு வருகிறார்கள். காவிரி நம்முடையது. இந்த விவகாரத்தில் கன்னடர்கள் அதிக சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டாம். தமிழக அரசும், மத்திய அரசும் பொறாமை, காழ்ப்புணர்ச்சியை கைவிட்டு காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண முன்வர வேண்டும். கர்நாடக மக்களும், விவசாயிகளும் பாதிக்கப்படும் நிலையில் தமிழக விவசாயிகள் நன்றாக இருக்க வேண்டுமா?. ஒரு சொட்டு காவிரி நீரை கூட தமிழகத்திற்கு திறந்துவிடாமல் இருக்கும் ஆற்றல் கன்னடர்களுக்கு உண்டு. கர்நாடகத்தின் மொழி, நிலம், நீர் பிரச்சினைகளுக்கு ஒட்டு மொத்த திரையுலகமும் குரல் கொடுக்கும் என்றார்.

நடிகர் ஸ்ரீநாத் பேசுகையில், கடந்த காலத்தில், மறைந்த நடிகர் ராஜ்குமார், காவிரி போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு அளித்தார் என்பதை நினைவு கூற விரும்புகிறேன் இந்த காவிரி போராட்டம் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கான போராட்டம். நம் அனைவரின் உயிர்நாடி காவிரி நீர். காவிரி பிரச்சினையை பெரியவர்கள் தீர்க்க வேண்டும். எங்களுக்கே தண்ணீர் இல்லாத போது எப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியும்? விவசாயிகள் இல்லாமல் நாங்கள் இல்லை. அந்த விவசாயிகளை காப்பாற்ற போராட வேண்டும். காவிரி விவகாரத்தில் எப்போதும் கர்நாடகத்திற்கு தான் தொந்தரவு ஏற்பட்டு வருகிறது. ஆனால் நாங்கள் யாருக்கும் தொல்லை கொடுப்பதில்லை என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.