புதுடெல்லி: பாஜக எம்பி மேனகா காந்தி ரூ.100 கோடி இழப்பீடு வழங்கக் கோரி இஸ்கான் அமைப்பு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில் இந்தியாவில் 60-க்கும் மேற்பட்ட கோசாலைகள் செயல்படுகின்றன.
இந்த சூழலில் பாஜக எம்.பி. மேனகா காந்தி சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், ஆந்திராவின் அனந்தபூரில் உள்ள இஸ்கான் அமைப்பின் கோசாலையில் இருந்த பசுக்கள், கன்றுக்குட்டிகள் இறைச்சிக்காக விற்பனை செய்யப்பட்டு உள்ளன. நாட்டிலேயே மிக மோசடியான அமைப்பு இஸ்கான்” என்று குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டை இஸ்கான் அமைப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதுதொடர்பாக இஸ்கான் அமைப்பின் துணைத் தலைவர் ராதாராமன் தாஸ் கொல்கத்தாவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: முன்னாள் மத்திய அமைச்சர், தற்போதைய மக்களவையின் உறுப்பினரான மேனகா காந்தி எவ்வித ஆதாரமும் இன்றி அபத்தமான குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறார். அவர் கூறிய கருத்துகள் மிகவும் துரதிருஷ்டவசமானது.
மேனகா காந்தியின் கருத்துகளால் உலகம் முழுவதும் உள்ள இஸ்கான் தொண்டர்கள் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர். அவர் கூறிய பொய்யை அம்பலப்படுத்துவோம். அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம். இதன்படி ரூ.100 கோடி இழப்பீடு வழங்கக் கோரி அவருக்கு வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு அவர் அளிக்கும் பதிலை பொறுத்துஅடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ராதாராமன் தாஸ் தெரிவித்தார்.