இந்தியாவில் உலக கோப்பை
கிரிக்கெட்டின் உட்சபட்ச திருவிழாவான ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அக்டோபர் 5 ஆம்தேதி தொடங்குகிறது. முன்னதாக பயிற்சி ஆட்டங்கள் எல்லாம் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் சொந்த மண்ணில் இந்திய அணி உலக கோப்பையை விளையாடுவதால் மீண்டும் ஒருமுறை உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக பலரும் கூறி வரும் நிலையில், அதற்கு நேர்மாறான கணிப்பை வெளியிட்டுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர். அவருடைய கணிப்பில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இம்முறை உலக கோப்பை வெல்லாது என தெரிவித்துள்ளார்.
உலக கோப்பையில் 10 அணிகள்
இம்முறை உலக கோப்பையில் 10 அணிகள் நேரடியாக களம் புகுந்துள்ளன. இரண்டு முறை உலக கோப்பை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் தகுதிச் சுற்றோடு வெளியேறிவிட்டது. இருப்பினும் ஐசிசி தரவரிசையில் டாப் 10-ல் இடம்பிடித்துக்கும் அணிகள் உலக கோப்பைக்கு மல்லுக்கட்ட தயாராக இருக்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா அணிகள் நேருக்கு நேர் மோதுவதற்கு தயாராக இருக்கின்றன. அனைத்து அணிகளுமே பேட்டிங், பவுலிங் என ஸ்டார் பிளேயர்களுடன் இந்த உலக கோப்பையில் களம் கண்டிருக்கின்றன. அதனால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெரிய எதிர்பார்ப்புடன் நடைபெற இருக்கிறது இந்த உலக கோப்பை.
சுனில் கவாஸ்கரின் கணிப்பு
இதனையொட்டி முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இம்முறை உலக கோப்பையை வெல்லும் அணி எவை? என தங்களின் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் இந்திய அணியின் ஜாம்பவானான சுனில் கவாஸ்கரும் தன்னுடைய கணிப்பை வெளியிட்டுள்ளார். அவர் இந்திய அணிக்கு சாதகமாக கூறுவார் என்று பார்த்தால், அதற்கு வாய்ப்பு குறைவு என தெரிவித்திருப்பதுடன் சர்பிரைஸ் அணி ஒன்றை தேர்வு செய்துள்ளார். கவாஸ்கரின் கணிப்பின்படி இம்முறை ஒருநாள் கிரிக்கெட் போட்டி உலக கோப்பையை இங்கிலாந்து அணி வெல்லும் என தெரிவித்துள்ளார். பேட்டிங், பவுலிங், ஆல்ரவுண்டர் என சூப்பரான அணியாக இங்கிலாந்து இருப்பதாகவும், அந்த அணியில் இருப்பவர்கள் அனைவரும் தனிநபராக போட்டியை மாற்றக்கூடியவர்களாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.