உலகக் கோப்பை கிரிக்கெட் ஆரம்பிப்பதையொட்டி கிரிக்கெட் ஆர்வலர்கள் பல்வேறு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை நடத்தத் தொடங்கியுள்ளனர்.
இங்குத் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் முன்பு செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் நடத்தியதுபோல பங்களாதேஷில் சினிமா நட்சத்திரங்களுக்கான கிரிக்கெட் லீக் ஒன்றைத் தற்போது நடத்தி வருகின்றனர். அதில் இன்று பங்களாதேஷ் சினிமா தயாரிப்பாளர்கள் முஸ்தபா கமல் ராஜ் மற்றும் தீபங்கர் தீபன் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது.
இப்போட்டியின் நடுவே நடுவரின் தீர்ப்பு தவறாக இருக்கிறது என்று இரண்டு அணியைச் சேர்ந்த நட்சத்திரங்களும் தண்ணீர் பாட்டில்கள், பேட், பந்து எனக் கையில் கிடைத்ததை எடுத்து எறிந்து ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். கூட்டத்தோடுக் கூட்டமாக அங்கிருந்த நடிகைகளையும் தாக்கி கிரிக்கெட் விளையாட வந்ததை மறந்து மல்யுத்தச் சண்டை போட்டுக் கொண்டுள்ளனர். இந்த மோதலில் 30க்கும் மேற்பட்டோர் சண்டை போட்டுக்கொண்டதாகவும், 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் களேபரத்திற்குத் தயாரிப்பாளர்கள் முஸ்தபா கமல் ராஜ், தீபங்கர் தீபன் இருவரும் மட்டுமின்றி, இதை ஏற்பாடு செய்த நிர்வாகமும் பொறுப்பேற்க வேண்டும் என்று அங்கிருப்பவர்கள் கடுமையாகக் கண்டித்து வருகின்றனர்.
‘ஒரு புறாவிற்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா’ என்பதுபோல் நடுவர் செய்த ஒரு சிறிய தவற்றால் கிரிக்கெட் மைதானமே மல்யுத்த மைதானமாக மாறியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.