சென்னை: சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள பழைய காவல் ஆணையர் கட்டிடம் சுமார் ரூ.6.47 கோடி செலவில் காவல் அருங்காட்சியகமாக புனரமைக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலினால் கடந்த 2021-ம் ஆண்டு செப்.28-ம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தின் 2-ம் ஆண்டு நிறைவு விழா நேற்று நடந்தது.
நிறைவு விழாவை டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தொடங்கி வைத்தனர். பின்னர், சென்னை காவல் துறை சார்பில் நடத்தப்பட்ட மாறுவேடம், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மற்றும் காவல் சிறார், சிறுமியர் மன்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினர்.
இதையடுத்து, தமிழ்நாடு வட்ட மூத்த பொது தபால் துறை அதிகாரி சாருகேசி, தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தின் சிறப்புத் தபால் அட்டை மற்றும் தபால் உறையை வெளியிட்டார். அதை டிஜிபி பெற்றுக் கொண்டார். முன்னதாக காவல் மோப்ப நாய்கள் கண்காட்சி, காவல் வாத்தியக் குழுவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், காவல் துறை இயக்குநர்கள் ஏ.கே.விஸ்வநாதன், சீமா அகர்வால், தாம்பரம் காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ், சென்னை கூடுதல் காவல் ஆணையர்கள் கபில் குமார், சி.மகேஸ்வரி, இணை ஆணையர் கயல்விழி உட்பட பலர் கலந்துகொண்டனர்.