காவிரி விவகாரத்தில் இனியாவது கர்நாடகத்திற்கு எதிராக உத்தரவுகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்: பசவராஜ் பொம்மை பேட்டி

பெங்களூரு:

முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

காவிரி விவகாரத்தில் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் இடையே ஒருங்கிணைப்பு இல்லை. அதேபோல் போலீஸ் மந்திரி மற்றும் உயர் அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லை என்பதும் நிரூபணம் ஆகியுள்ளது. கொள்ளை நடந்த பிறகு வீட்டு கதவை மூடுவது போல் காவிரி விவகாரத்தில் இப்போது சட்ட போராட்டம் நடத்துவதாக இந்த அரசு சொல்கிறது.

சட்ட நிபுணர்களுடன் பேசும் பணியை முன்பே செய்திருக்க வேண்டும். இப்போதாவது இந்த அரசு நேர்மையான முறையில் சட்ட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். வரும் நாட்களில் கர்நாடகத்திற்கு எதிராக உத்தரவுகள் வராத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். நிலம், நீர், மொழி விஷயங்களில் சுப்ரீம் கோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜ் பட்டீல் ஆழமான அனுபவம் கொண்டவர். அவரிடம் தொடக்கத்திலேயே ஆலோசனை கேட்டு இருக்க வேண்டும்.

கர்நாடகத்தில் வறட்சி இருக்கும் நிலையில் இத்தகைய மோசமான அரசு இருப்பது வேதனை அளிக்கிறது. வட கர்நாடகத்தில் அதிக வறட்சி இருக்கிறது. இதற்கும் மத்திய அரசை கை காட்டுகிறார்கள். வெள்ளம் வந்தபோது நாங்கள் அதிகளவில் நிவாரணம் வழங்கினோம். நெருக்கடியான நேரத்தில் அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பதன் அடிப்படையில் தான் அரசின் போக்கு தெரியும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.