ராஜ்கோட்: குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகருக்கு அருகே உள்ளது மிதி ரோகர் என்ற கடற்கரை கிராமம். இங்கு போதைப் பொருள் கடத்தல் நடைபெறுவதாக கட்ச் கிழக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது கடற்கரை பகுதியில் சில பாக்கெட்டுகள் சிதறிக்கிடந்தன.
அவற்றை போலீஸார் சேகரித்து தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பினர். தலா ஒரு கிலோ எடையில் 80 பாக்கெட்டுகளில் இருந்தது கோகைன் போதைப் பொருள் என்பது பரிசோதனையில் தெரியவந்தது. இவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.800 கோடி.
இதுகுறித்து கட்ச் கிழக்கு காவல்துறை கண்காணிப்பாளர் சாகர் பக்மர் கூறுகையில், ‘‘சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் உள்ளூர் நபர்களிடம் போதைப் பொருட்களை நேரடியாக கொடுப்பதில்லை. போதைப் பொருள் பார்சல்களை தனியாக ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விட்டு, அதன்பின் அவற்றை எடுத்துச் செல்லும் நபருக்கு தகவல் தெரிவிக்கின்றனர். அதனால் கடற்கரை மற்றும் கடலோர கிராமங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளோம். இந்த போதைப்பொருள் யாருக்கு அனுப்பப்பட்டது என்பதை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளோம்’’ என்றார்.
பாகிஸ்தானுக்கு அருகே கட்ச்பகுதி உள்ளதால், போதைப் பொருள் கடத்தல் அதிகளவில் நடக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் இங்கு போதைப் பொருட்கள் அதிகளவில் கைப்பற்றப்பட்டுள்ளன.