தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பதற்கு கண்டனம்: முழுஅடைப்பால் கர்நாடகம் முடங்கியது

பெங்களூரு:

தென்மேற்கு பருவமழை பொய்த்துப்போகும் காலங்களில் தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையே காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வதில் பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 21-ந் தேதி, தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதற்கு எதிராக கர்நாடகத்தில் போராட்டங்கள் வெடித்தன. குறிப்பாக மண்டியா மாவட்டத்தில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 18-ந் தேதி மண்டியாவில் முழு அடைப்பு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கடந்த 26-ந் தேதி கா்நாடக நீர் பாதுகாப்பு குழு சார்பில் பெங்களூருவில் முழு அடைப்பு நடைபெற்றது.

அன்றைய தினம் டெல்லியில் கூடிய காவிரி ஒழுங்காற்று குழு, தமிழகத்திற்கு 28-ந் தேதி(அதாவது நேற்று முன்தினம்) முதல் 18 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதற்கு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதே நேரத்தில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், தமிழகத்தின் கோரிக்கையை நிராகரித்து பிறப்பித்துள்ள இந்த உத்தரவு மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

இந்த நிலையில் தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு, 29-ந் தேதி (அதாவது நேற்று) கர்நாடகத்தில் முழு அடைப்பு நடைபெறும் என்று அறிவித்தது. இதற்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கன்னட சங்கங்கள் மற்றும் பிற சங்கங்கள் ஆதரவு அளிப்பதாக கூறின.

இந்த நிலையில் கர்நாடகத்தில் நேற்று திட்டமிட்டபடி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி எப்போதும் பரபரப்பாக இயங்கும் தலைநகர் பெங்களூரு முடங்கியது. இதன் மூலம் ஒரே வாரத்தில் 2-வது முறையாக பெங்களூரு முடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. சாலைகளில் ஆட்டோக்கள், வாடகை கார்கள், சரக்கு வாகனங்கள் இயங்கவில்லை. தனியார் பஸ்களும் தங்களின் சேவையை நிறுத்தின. அதே நேரத்தில் அரசு மாநகர பஸ்கள் (பி.எம்.டி.சி.) 50 சதவீதம் இயக்கப்பட்டன.

இதனால் மெஜஸ்டிக் பஸ் நிலையத்திற்கு பஸ்கள் வந்து சென்றன. ஆனால் பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கை வெகு குறைவாக இருந்தது. பயணிகள் வருகை குறைவாக இருந்தாலும், பஸ்கள் தொடர்ந்து இயக்கப்பட்டன. அதேபோல் கே.எஸ்.ஆர்.டி.சி. (கர்நாடக அரசு போக்குவரத்து கழகம்) பஸ்களும் இயக்கப்பட்டன. வெளிமாவட்டங்களில் இருந்து பஸ்கள் தலைநகருக்கு வந்து சென்றன. அதிலும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது. தமிழக பஸ்கள் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்பட்டதால், அந்த பஸ்கள் வந்து செல்லும் கெங்கேரி சேட்டிலைட் பஸ் நிலையம் வெறிச்சோடி இருந்தது.

சாலைகளில் தனியார் வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் குறைந்த அளவில் ஓடியது. சில நேரங்களில் சாலைகளில் வாகனங்கள் இல்லாத நிலையும் காணப்பட்டது. இதன் காரணமாக எம்.ஜி.ரோடு, ரிச்மண்டு ரோடு, கஸ்தூரிபா ரோடு, லால்பாக் ரோடு, ஓசூர் ரோடு, மகாராணி கல்லூரி ரோடு, நிருபதுங்கா ரோடு, கார்ப்பரேஷன் சர்க்கிள், கே.ஜி.ரோடு உள்ளிட்ட பல்வேறு ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டன. மருந்து கடைகள், பால் விற்பனை நிலையங்கள், அரசு-தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கிளினிக்குகள் எப்போதும் போல் திறக்கப்பட்டு இருந்தன. ஆம்புலன்ஸ் வாகனங்கள் தடையின்றி சென்று வந்தன.

பெங்களூருவில் அரசு-தனியார் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்ததால் அவை மூடப்பட்டு இருந்தன. நேற்று நடைபெற இருந்த தேர்வுகள் வேறு நாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த முழு அடைப்பால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் என்று பள்ளி நிர்வாகங்கள் கவலை அடைந்துள்ளன. இந்த இழப்பை ஈடுகட்ட வேறு நாள் வகுப்புகளை நடத்த பள்ளி நிர்வாகங்கள் திட்டமிட்டுள்ளன.

பெரிய வணிக வளாகங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள் போன்றவை மூடப்பட்டு இருந்தன. இதன் காரணமாக சிக்பேட்டை, கமர்ஷியல் தெரு, அவென்யூ ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது. திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு இருந்தன. கல்வீச்சு போன்ற சம்பவங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வணிக வளாகங்களின் முன் பகுதியில் திரை விரிக்கப்பட்டு பாதுகாப்பு செய்திருந்தனர். பரபரப்பாக காணப்படும் கே.ஆர்.மார்க்கெட், கோரமங்களா மார்க்கெட், மல்லேசுவரம் மார்க்கெட் போன்றவை மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி இருந்தன. சாலைகளும் வெறிச்சோடின.

கன்னட திரைத்துறையினர் சிவானந்த சர்க்கிள் அருகே உள்ள சினிமா வர்த்தக சபை கட்டிட வளாகத்தில் போராட்டம் நடத்தினர். சினிமா வர்த்தக சபை தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நடிகர்கள் சிவராஜ்குமார், உபேந்திரா, துருவ் சர்ஜா, பிரேம், துனியா விஜய், சுருஜன் லோகேஷ், நடிகைகள் பூஜா காந்தி, சுருதி, உமாஸ்ரீ, கிரிஜா, பிரமிளா ஜோசாய் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், துணை நடிகர்கள் என கன்னட திரைஉலகினர் பலரும் கலந்து கொண்டனர். மேலும் நேற்று சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு இருந்தன.

கன்னட அமைப்பினர் டவுன்ஹால் பகுதியில் கூடி ஊர்வலம் நடத்த முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றி சுதந்திர பூங்காவுக்கு அழைத்துச் சென்றனர். வேனில் ஏற மறுத்தவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். சுதந்திர பூங்காவில் கூடிய கன்னட அமைப்பினர் தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

கன்னட அமைப்பினர் ஒருவரை குளிப்பாட்டினர். சோப்பு, ஷாம்பு போட்டு தேய்த்து குளிக்க வைத்து நூதன முறையில் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கன்னட சலுவளி வாட்டாள் கட்சி தலைவா் வாட்டாள் நாகராஜ், பர்தா அணிந்து தலையில் காலி குடத்தை வைத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினார். இதன் மூலம் அவர் மற்றவர்களின் கவனத்தை ஈர்த்தார். நகாின் பல்வேறு பகுதிகளில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவ படத்தை தாக்கி தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

பயணிகள் வருகை குறைவாக இருந்ததால் பெங்களூருவில் இருந்து புறப்படுவது மற்றும் நாட்டின் பல்வேறு நகரங்களில் வருவது என மொத்தம் சுமார் 44 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் அவற்றில் முன்பதிவு செய்து இருந்த பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்குள் 5 பேர் டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு சென்றனர். பயணிகள் போல் நடித்து உள்ள சென்ற அவர்கள் திடீரென கோஷங்களை எழுப்பினர். இதனால் அதிர்ச்சி அடைந்த விமான நிலைய அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களை போலீசார் வெளியே இழுத்து வந்து கைது செய்தனர்.

பெங்களூருவை போல் மைசூரு, மண்டியா, ராமநகர், சாம்ராஜ்நகர், ஹாசன், சிக்கமகளூரு, சிவமொக்கா, துமகூரு உள்ளிட்ட பகுதிகளிலும் முழு அடைப்பு வெற்றிகரமாக நடந்ததாக கன்னட அமைப்பினர் கூறினர். சில மாவட்டங்களில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாலும், போராட்டம் தீவிரமடைந்ததாலும் பஸ்கள் நிறுத்தப்பட்டன. முழுஅடைப்பு காரணமாக நேற்று கர்நாடகம் முடங்கியது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது.

அதே நேரத்தில் வட கர்நாடகத்தில் பஸ்கள், ஆட்டோக்கள், கடைகள் வழக்கம் போல் இயங்கின. அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பெங்களூரு உள்பட மாநிலத்தில் எங்கும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை. முழு அடைப்பு அமைதியான முறையில் நடந்து முடிந்தது.

அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் நோக்கத்தில் மாநிலம் முழுவதும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பெங்களூருவில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகள், தமிழர்கள் நடத்தும் கடைகள், தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. காவிரி பிரச்சினைக்காக ஒரே மாதத்தில் 3 முறை முழு அடைப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு

முழு அடைப்பால் ஜிகினி, பொம்மசந்திரா, பீனியா, ராஜாஜிநகர் உள்ளிட்ட பகுதிகளில் தொழிற்பேட்டைகள் மூடப்பட்டு இருந்தன. பெங்களூருவில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்களும் மூடப்பட்டன. இது மட்டுமின்றி மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் இதர தொழில் நிறுவனங்களும் நேற்று தங்களின் உற்பத்தியை நிறுத்தின. இதன் காரணமாக பல ஆயிரம் கோடி ரூபாய் உற்பத்தி மற்றும் வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக தொழில் நிறுவனத்தினர் கூறினர்.

அரசு அலுவலகங்கள்-கோர்ட்டுகள் இயங்கின

முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றாலும் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. பெங்களூருவில் மாநில அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. ஆனால் அலுவலகங்களுக்கு வந்த ஊழியர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தது. அதே போல் மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள், தபால் நிலையங்கள் எப்போதும் போல் செயல்பட்டன. கர்நாடக ஐகோர்ட்டு மற்றும் இதர கோர்ட்டுகளும் எந்த தடையும் இன்றி இயங்கின. ஆனால் கோர்ட்டுகளுக்கு வக்கீல்களின் வருகை வழக்கத்தை விட குறைவாக இருந்தது.

சுற்றுலா தலங்கள் மூடல்

முழுஅடைப்பு காரணமாக கர்நாடகத்தில் நேற்று ஏராளமான சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. குறிப்பாக மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட ஊர்களில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் வெளியூர்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் செய்வதறியாது திகைத்துப்போயினர். வாடகை கார்கள் கிடைக்காமலும், தங்குவதற்கு விடுதி அறைகள் கிடைக்காமலும் அவதி அடைந்தனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.