தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கத் தடையா? – மத்திய அரசின் உத்தரவும் பின்னணியும்!

“தமிழ்நாட்டில் 253 பேருக்கு ஒரு மருத்துவர் இருப்பதைக் காரணம் காட்டி மருத்துவக் கல்லூரிகளுக்கு தடை விதிப்பது அநீதி. ஒரு மாநிலத்தில் மருத்துவக் கல்லூரிகளை திறக்க அனுமதிக்கலாமா, வேண்டாமா? என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு தான் உண்டு. தேசிய மருத்துவ ஆணையத்திற்கு அந்த அதிகாரம் கிடையாது. இந்த விவகாரத்தில் தேசிய மருத்துவ ஆணையம் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான கட்டுப்பாடுகளை விதிப்பதும், அதற்கு மத்திய அரசு உடந்தையாக இருப்பதும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானவை!” என பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

டாக்டர் அன்புமணி ராமதாஸ்

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் பல்வேறு முக்கிய விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். அதில், “தேசிய மருத்துவ ஆணையம் வகுத்திருக்கும் புதிய விதிகளின்படி, தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளும், அவற்றில் உள்ள மாணவர் சேர்க்கை இடங்களும் தேவைக்கும் அதிகமாக இருப்பதால், அடுத்த ஆண்டு முதல் புதிய மருத்துவக் கல்லூரிகளை திறக்கவும், மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் மருத்துவக் கல்விக் கட்டமைப்புகளை அதிகரிக்க வேண்டும் என்ற குரல்கள் ஒலித்து வரும் நிலையில், மருத்துவ ஆணையத்தின் புதிய விதி மிகவும் பிற்போக்கானது!” எனத் தெரிவித்திருக்கிறார்.

தேசிய மருத்துவ ஆணையத்தின் விதி:

மத்திய அரசிதழில் ஆகஸ்ட் 16-ஆம் நாள் வெளியிடப்பட்டுள்ள இளநிலை மருத்துவக் கல்விக்கான தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதிமுறைகளில், 10 லட்சம் மக்கள்தொகைக்கு அதிகபட்சமாக 100 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், அதற்கும் கூடுதலான மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ள மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளோ, மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களோ அனுமதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் இந்த விதிமுறைகள் தமிழகம் போன்ற வளர்ந்த மாநிலங்களையே பாதிக்கும்.

தேசிய மருத்துவ ஆணையம்

2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் மக்கள்தொகை 7.23 கோடி ஆகும். 2021-ஆம் ஆண்டில் இது 7.64 கோடி என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த மக்கள்தொகைக்கு தமிழ்நாட்டில் அதிக அளவாக 7,640 மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே இருக்க முடியும். ஆனால், தமிழ்நாட்டில் இன்றைய நிலையில், 11,600 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. அதனால், இன்னும் பல பத்தாண்டுகளுக்கு தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க முடியாது; அதுமட்டுமின்றி, இப்போது இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்களையும் ஏற்படுத்த முடியாது. புதுச்சேரி, கேரளம், ஆந்திரம், தெலுங்கானா ஆகிய தென்மாநிலங்களுக்கும் இதே நிலை தான் ஏற்படும்.

மருத்துவ மாணவர்கள்

தேசிய மருத்துவ ஆணையத்தின் குறைநோக்கு பார்வை!

தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த நடவடிக்கை சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதிகளவில் மருத்துவர்கள் உருவாக்கப்பட்டால், எதிர்காலத்தில் மருத்துவர்களுக்கு வேலை கிடைக்காது என்பதால் தான் இந்த புதிய கட்டுப்பாட்டைக் கொண்டு வந்திருப்பதாக தேசிய மருத்துவ ஆணையம் கூறுகிறது. இது அனைத்து அம்சங்களையும் ஆராயாமல் எடுக்கப்பட்ட குறைநோக்கு பார்வை கொண்ட நடவடிக்கை ஆகும். தமிழ்நாட்டில் 11,600 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் இருந்தாலும் கூட, அந்த இடங்கள் அனைத்திலும் படிப்பவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல. தமிழகத்தில் உள்ள 12 நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களில் உள்ள 2500 இடங்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும் 783 இடங்கள், தனியார் கல்லூரிகளில் கடைசி நேரத்தில் நிர்வாகத்தால் நிரப்ப அனுமதிக்கப்படும் இடங்கள் ஆகியவற்றை சேர்த்தால் கிட்டத்தட்ட 4,000 இடங்களில் யாரை வேண்டுமானாலும் சேர்க்க முடியும். அந்த இடங்களில் பெரும்பாலும் பிற மாநில மாணவர்கள் தான் சேருகின்றனர். அதனால், அந்த இடங்கள் அனைத்தையும் தமிழகத்தின் கணக்கில் சேர்க்கக்கூடாது.

மருத்துவக் கல்லூரிகளுக்கு தடை விதிப்பது அநீதி!

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி இடங்கள் அனைத்தும் தமிழகத்திற்கானவை தான்; அவற்றில் படிக்கும் மாணவர்கள் தமிழ்நாட்டில் மட்டும் தான் சேவை செய்வார்கள் என்ற மருத்துவ ஆணையத்தின் பார்வையே தவறானது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தான் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ளனவே தவிர, வட மாநிலங்கள் அனைத்தும் மருத்துவக் கல்வி வழங்குவதில் இன்னும் பின்தங்கி தான் உள்ளன. அங்கு மருத்துவர்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. அதனால், தமிழகத்தில் பயிலும் மருத்துவ மாணவர்கள், பிற மாநிலங்களில் சேவையாற்றும் வாய்ப்புகள் உள்ள நிலையில், அவற்றை கருத்தில் கொள்ளாமல் இந்தக் கட்டுப்பாட்டை விதிப்பது அபத்தமானது. அதுமட்டுமின்றி, பிற சிக்கல்கள் அனைத்திலும் ஒரே நாடு… ஒரே நிலைப்பாடு என்ற கொள்கையை கடைபிடிக்கும் மத்திய அரசு, இதில் மட்டும் தமிழ்நாடு, ஆந்திரம் என மாநிலங்களை பிரித்துப் பிரித்து பார்ப்பது எந்த வகையில் நியாயமாகும்?

மருத்துவம்

உலகில் மக்கள்தொகைக்கு இணையாக அதிக மருத்துவர்களைக் கொண்ட நாடு கியூபா தான். 2019-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அங்கு 110 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார். கத்தார் நாட்டில் 125 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார். அதற்காக அந்த நாடுகளில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க தடை விதிக்கப்படவில்லை. அவ்வாறு இருக்கும் போது தமிழ்நாட்டில் 253 பேருக்கு ஒரு மருத்துவர் இருப்பதைக் காரணம் காட்டி மருத்துவக் கல்லூரிகளுக்கு தடை விதிப்பது அநீதி.

தமிழ்நாடு அரசு

மாநில அரசுக்குத்தான் அதிகாரம்:

இவை அனைத்திற்கும் மேலாக ஒரு மாநிலத்தில் மருத்துவக் கல்லூரிகளை திறக்க அனுமதிக்கலாமா, வேண்டாமா? என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு தான் உண்டு. தேசிய மருத்துவ ஆணையத்திற்கு அந்த அதிகாரம் கிடையாது. இந்த விவகாரத்தில் தேசிய மருத்துவ ஆணையம் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான கட்டுப்பாடுகளை விதிப்பதும், அதற்கு மத்திய அரசு உடந்தையாக இருப்பதும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானவை. இதை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளக் கூடாது.

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ளன என்றால், அது அந்த மாநிலங்களின் அரசுகள் பல பத்தாண்டுகளாக திட்டமிட்டு, தொலைநோக்குப் பார்வையுடன் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயன் ஆகும். அதற்காக அந்த மாநில அரசுகளை மத்திய அரசும், மருத்துவ ஆணையமும் பாராட்ட வேண்டுமே தவிர, இதுபோன்ற கட்டுப்பாடு விதித்து தண்டிக்கக்கூடாது. மக்கள்தொகையை கட்டுப்படுத்தத் தவறிய வட மாநிலங்களுக்கு அதிக மக்களவைத் தொகுதிகளை வழங்குவோம்; மக்கள்தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைப்போம் என்பதற்கும், இதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. சிறப்பாக செயல்படும் மாநிலங்களைத் தண்டிக்கும் போக்கு தொடர்ந்தால், அது இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக மாறும்.

முதல்வர் ஸ்டாலின் – மத்திய அரசு

தமிழ்நாடு அரசு குரல்கொடுக்க வேண்டும்!

மருத்துவக் கல்வி தொடர்பான தமிழ்நாட்டின் தேவைகள் என்னென்ன? என்பதை தமிழக அரசு தான் தீர்மானிக்க வேண்டும்; வெறும் ஒழுங்குமுறை அமைப்பான தேசிய மருத்துவ ஆணையம் அதை தீர்மானிக்க முடியாது. இதை உணர்ந்து புதிய விதிமுறைகள் அடங்கிய அறிக்கையை மருத்துவ ஆணையம் உடனே திரும்பப் பெற வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு அதன் அமைதியை கலைத்து விட்டு, அதன் மருத்துவக் கல்வி உரிமைகளைக் காக்க உறுதியாக குரல் கொடுக்க வேண்டும்!” என வலியுறுத்தியிருக்கிறார்.

வழிமுறைகளைப் பின்பற்றி எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்படும் தமிழ்நாட்டுக்கு, மத்திய அரசின் பரிசு தண்டனையா?!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.