தமிழகத்துக்கு 3,000 கன அடி நீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவு | Cauvery Commission orders to release 3,000 cubic feet of water to Tamil Nadu

அடுத்த, 15 நாட்களுக்கு வினாடிக்கு, 3,000 கன அடி வீதம், காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் நேற்று புதுடில்லியில் நடந்தது. ஆணையத்தின் தலைவர் ஹல்தர் தலைமையில், 25வது முறையாக கூடிய இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரள அரசுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மறுப்பு

தமிழக அரசின் சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலர் மணிவாசன், சென்னையிலிருந்தபடியே ‘வீடியோ கான்பரஸ்’ வாயிலாக பங்கேற்றார்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த கூட்டத்தில், கர்நாடக அரசின் சார்பில் நீர்வளத்துறை செயலர் ராகேஷ் சிங் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பங்கேற்றனர்.

தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டதாவது:

கர்நாடக அணைகளில், 50 டி.எம்.சி.,க்கு மேல் நீர் இருப்பு உள்ளது. எனவே, அம்மாநில அரசு நினைத்தால், 5,000 கன அடி வரை திறந்துவிட முடியும்.

ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின்படி தந்திருக்க வேண்டிய தண்ணீரின் அளவும் நிறைய பாக்கி உள்ளது. இதுபோன்ற அனைத்து பாதிப்புகளையும் தமிழகம் தாங்கிக் கொண்டிருக்கிறது.

இப்பிரச்னையில் வேண்டுமென்றே உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி கர்நாடகா செயல்படுகிறது. எனவே, வினாடிக்கு 12,500 கன அடி நீரை திறந்து விட வேண்டும்.

இவ்வாறு வாதிடப்பட்டது.

இந்த கோரிக்கையை உறுதியாக மறுத்த கர்நாடக அரசு, ‘அணைகளில் உள்ள நீர், எங்களின் தேவைக்கே போதவில்லை. விவசாயிகள் போராட்டம் தீவிரம்அடைந்து வருகிறது.

‘போராட்டம் உள்ளிட்ட காரணங்களால் மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கும் பிரச்னையாகி வருகிறது. எனவே, 3,000 கன அடி நீர் திறந்து விட வேண்டுமென்ற ஒழுங்காற்றுக்குழுவின் பரிந்துரையை ஆணையம் ஏற்கக் கூடாது’ என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து, இருதரப்பு வாத பிரதிவாதங்கள் சூடுபிடித்தபடி இருக்கவே, ஒழுங்காற்றுக்குழு அளித்த புள்ளி விபரங்களை பரிசீலனையில் எடுத்துக் கொள்வதாக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அணைகளின் நீர் இருப்பு, நீர் வரத்து மற்றும் தேவைகளை ஆராய்ந்த ஆணையத்தின் தலைவர் ஹல்தர் உத்தரவிட்டதாவது:

ஒழுங்காற்றுக் குழு அளித்த பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள புள்ளி விபரங்கள் ஏற்க கூடியவையாக உள்ளன. எனவே, அந்த பரிந்துரைகளுக்கு ஆணையம் ஒப்புதல் தெரிவிக்கிறது.

இறுதி முடிவு

அதன்படி, அடுத்த 15 நாட்களுக்கு, அதாவது அக்டோபர் 15 வரை, வினாடிக்கு 3,000 கன அடி வீதம், தமிழகத்துக்கு காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீரை திறந்துவிட வேண்டும்.

இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு குறித்து, தங்களால் உடனடியாக எதையும் தெரிவிக்க முடியாதென்றும், முதல்வர் மற்றும் உயர் அதிகாரிகள் கூடி ஆலோசித்தே இறுதி முடிவை தெரிவிக்க முடியுமென்றும் கர்நாடக நீர்வளத்துறை செயலர் ராகேஷ் சிங் தெரிவித்தார்.

மிக முக்கியமான சூழ்நிலையில், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு நீர் திறந்துவிடும்படி மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவு, தமிழக மற்றும் கர்நாடக அரசுகளையும் தாண்டி, புதுடில்லி அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

— நமது டில்லி நிருபர் –

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.