கராச்சி, பாகிஸ்தானில் மிலாது நபியை ஒட்டி ஏற்பாடு செய்திருந்த பேரணிக்கு தயாராக இருந்த கும்பலில், பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில், 55 பேர் உயிரிழந்தனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் மஸ்டங் மாவட்டம் அமைந்துள்ளது.
சிறப்பு பேரணி
இங்கு அல் – பலா சாலையில் உள்ள மசூதி அருகே, மிலாது நபி பண்டிகையை ஒட்டி நேற்று சிறப்பு பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதற்காக, மஸ்டங் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குழந்தைகள், பெரியவர்கள் உட்பட ஏராளமானோர் அங்கு குவிந்திருந்தனர்.
அப்போது, கூட்டத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
இதனால், அப்பகுதியே புகை மண்டலமாக மாறியது. மரண ஓலங்களுக்கு நடுவே அங்கிருந்தவர்கள் அலறியடித்தபடி ஓடினர். இந்த சம்பவத்தில், கூட்டத்தில் இருந்த 55 பேர் பரிதாபமாக பலியாகினர்.
பாதுகாப்புக்கு வந்திருந்த மஸ்டங் மாவட்ட டி.எஸ்.பி., நவாஸ் கஷ்கோரியும் இந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தார்.
படுகாயங்களுடன் போராடிய, 130க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து, உள்ளூர் போலீஸ் அதிகாரி முகமது ஜாவேத் லெஹ்ரி கூறுகையில், ”இது தற்கொலைப்படை தாக்குதல். போலீஸ் டி.எஸ்.பி., காருக்கு அருகே இருந்த நபர் தன்னைத் தானே வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தியுள்ளார்,” என்றார்.
சோதனை
இந்தத் தாக்குதலுக்கு, எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
குண்டு வெடிப்பை அடுத்து, பலுசிஸ்தான் மாகாணம் முழுதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பாகிஸ்தானின் இடைக்கால உள்துறை அமைச்சர் சர்ப்ரஸ் அகமது புக்டி, பலுசிஸ்தான் மாகாண முதல்வர் அலி மர்தான் தொம்கி, இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்