பாகிஸ்தானில் மசூதியில் குண்டு வெடித்து 55 பேர் பலி: 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

இஸ்லாமாபாத்,

சிறப்பு தொழுகை

பாகிஸ்தானில் மிலாது நபி உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பலுசிஸ்தான் மாகாணம் மஸ்துங் நகரில் உள்ள ஒரு மசூதியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதற்காக அங்கு ஏராளமானோர் கூடியிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த மசூதியில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

எனினும் இந்த குண்டுவெடிப்பில் 52 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது. இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்த சிறிது நேரத்தில் கைபர் பக்துங்வா மாகாணம் ஹங்கு பகுதியில் உள்ள ஒரு மசூதியிலும் குண்டு வெடித்து 3 பேர் பலியாகினர்.

இதன் காரணமாக குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிகள் போர்க்களம் போல காட்சியளித்தது. எனவே பாதுகாப்பு கருதி அங்கு ஏராளமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே சம்பவ இடத்துக்கு சென்ற மீட்பு படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

இந்த கோர சம்பவத்தில் பலியானவர்களுக்கு பாகிஸ்தானின் இடைக்கால பிரதமர் அன்வர் உல் ஹக் கக்கர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலையும், கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த கோர சம்பவம் காரணமாக அங்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ராணுவத்தினர் நடத்திய விசாரணையில் இரு சம்பவங்களுமே தற்கொலை படையை சேர்ந்த பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்டது தெரிய வந்தது.

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத தளபதி சுட்டு கொல்லப்பட்ட அடுத்த நாளில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனவே அவர்கள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என ராணுவம் தெரிவித்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.