போபால்: மத்திய பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 12 வயது சிறுமியின் மருத்துவம், கல்வி உள்ளிட்ட பொறுப்புகளை தான் ஏற்றுக்கொள்வதாக, அம்மாநில காவல் துறை அதிகாரி அஜய் வர்மா தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசம் சாட்னா பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி, வீட்டுக்கு தெரியாமல் ரயில் ஏறி கடந்த 25-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு உஜ்ஜைனி ரயில் நிலையத்தில் இறங்கினார். அந்தச் சிறுமியை மர்ம நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி சுமார் 8 கி.மீ. தொலைவு நடந்து சென்று உள்ளார். செல்லும் வழியில் உடலில் ரத்தம் சொட்ட சொட்ட சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகளில் அவர் உதவி கோரியுள்ளார். ஆனால் யாரும் உதவி செய்யவில்லை. இறுதியில் ஓர் ஆசிரமத்தின் நிர்வாகிகள் சிறுமி குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸார் விரைந்து வந்து சிறுமியை மீ்ட்டு உஜ்ஜைனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக இந்தூர் அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளித்த டாக்டர் அசோக் லத்தா கூறும்போது, “பாலியல் வன்கொடுமையால் சிறுமி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.
இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறும்போது, “சுமார் 72 மணி நேர சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து 6 ஆட்டோ ஓட்டுநர்களை பிடித்துள்ளோம். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆட்டோ ஓட்டுநர் பாரத் சோனி (38) முதலில் சிறுமியை சந்தித்துள்ளார். அவரது ஆட்டோவில் ரத்த கறை படிந்திருக்கிறது. அவர் மீதான சந்தேகம் வலுவடைந்துள்ளது. அவரது மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.
மற்ற ஆட்டோ ஓட்டுநர்களின் மரபணுக்களையும் சோதனை செய்ய உள்ளோம். உண்மையான குற்றவாளிகள் யார் என்பது விரைவில் தெரிந்துவிடும். பாதிக்கப்பட்ட சிறுமி உடல்நலம் தேறி வருகிறார். முழுமையாக உடல் நலம் தேறிய பிறகுஅவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவார்” என்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் காவல் அதிகாரி அஜய் வர்மா என்பவர், அந்தச் சிறுமியின் மருத்துவம், கல்வி மற்றும் திருமணம் போன்ற பொறுப்புகளை தான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
“அந்தச் சிறுமிக்கு உரிய மருத்துவ சிகிச்சை, முறையான கல்வி மற்றும் திருமணம் செய்து வைப்பது என அனைத்து பொறுப்புகளையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். என்னுடைய இந்த முடிவை அறிந்து பலரும் எனக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர். மேற்கூறிய அனைத்தையும் நல்லபடியாக நிறைவேற்றுவேன் என நான் நம்புகிறேன்” என அஜய் வர்மா தெரிவித்துள்ளார். இவர் மகாகல் காவல் நிலையப் பொறுப்பாளராக உள்ளார்.
#WATCH | Ujjain minor rape case | Station In-charge of Mahakal Police Station, Ajay Verma, says, “I have taken the responsibility to help the girl with medical treatment, education, and marriage… Many people have come forward to support me in this resolution… I believe that… pic.twitter.com/ijUDZqG1Gz
— ANI (@ANI) September 29, 2023