சென்னை: தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதில், புதிய ரயில்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
ரயில் பயணிகளின் வசதிக்காக, ஒவ்வோர் ஆண்டும் தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி, புதிய கால அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.
இதில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 11 ரயில்கள், 8 ரயில்கள் பயணிக்கும் தொலைவு நீட்டிப்பு, இரண்டு ரயில்களின் சேவை அதிகரிப்பு, 199 விரைவு ரயில்கள் வெவ்வேறு ரயில் நிலையங்களில் நின்று செல்லும் வசதி உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றின் விவரம் வருமாறு:
சென்னை சென்ட்ரல்-கோவை இடையேிலான வந்தே பாரத் ரயில் சேவை கடந்த ஏப். 8-ம் தேதி தொடங்கிவைக்கப்பட்டது. இதுபோல, திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே ரயில் சேவை, தாம்பரம்-செங்கோட்டை இடையே வாரம் 3 முறை அதிவிரைவு ரயில் சேவை, சென்னை சென்ட்ரல்-மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை, சென்னை சென்ட்ரல்-விஜயவாடா இடையே வந்தே பாரத் ரயில் சேவை, சென்னை எழும்பூர்-திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவை உள்ளிட்ட 11 விரைவு ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
சென்னை சென்ட்ரல்-மதுரை இடையே வாரம் 3 முறை இயக்கப்பட்ட விரைவு ரயில் போடிநாயக்கனூர் வரை ஜூன் 16-ம் தேதியில் இருந்து நீட்டிக்கப்பட்டது. மயிலாடுதுறை-திண்டுக்கல் இடையே இயக்கப்பட்ட விரைவு ரயில் ஆக.28-ம் தேதியில் இருந்து செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டது.
இதுதவிர, மதுரை-தேனி முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரயில் போடிநாயக்கனூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், 4 ரயில்கள் நீட்டிப்பு விவரம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
தினசரி ரயில் சேவை: மேட்டுப்பாளையம்-கோவை இடையே வாரம் 6 நாட்கள் இயக்கப்பட்ட மெமு சிறப்பு ரயில், வாரம் முழுவதும் இயக்கப்படும். இந்த வசதி கடந்த ஆண்டு டிச.11-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதேபோல, திப்ருகர்-கன்னியாகுமரி விவேக் விரைவு ரயில் வாரம் இருமுறை ரயிலாக நீட்டிக்கப்பட்டது.
சென்னை எழும்பூர்-மதுரை இடையே இயக்கப்பட்ட தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நின்றுசெல்லும் வசதி சோதனை அடிப்படையில் பிப். 26-ம்தேதி அனுமதிக்கப்பட்டது. இதேபோல, 199 ரயில்கள் வெவ்வேறு ரயில் நிலையங்களில் சோதனை அடிப்படையில் நின்று செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன.