புதுடெல்லி: தனது தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் இனி பேனர்கள், போஸ்டர்கள் இடம்பெறாது என்றும் மக்களுக்கு தேநீர் வழங்கப்படமாட்டாது என்றும் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு வாக்களிப்பவர்களும் அவ்வாறே செய்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் வாஷிமில் மூன்று நெடுஞ்சாலைத் திட்டங்களைத் தொடங்கி வைத்த அமைச்சர் நிதின் கட்கரி, நிகழ்ச்சியில் பேசும்போது, “இந்த மக்களவைத் தேர்தலில் எனது பிரச்சாரத்தில் பேனர்கள் வைக்கவோ, போஸ்டர்கள் ஒட்டவோ போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். அதேபோல் பிரச்சாரத்தின் போது தேநீர் வழங்கப்போவதில்லை. எனக்கு வாக்களிக்க விரும்புகிறவர்கள் கட்டாயம் வாக்களிப்பார்கள். விருப்பம் இல்லாதவர்கள் வாக்களிக்க மாட்டார்கள். அதேபோல் நான் லஞ்சம் வாங்கவும் மாட்டேன், யாரையும் லஞ்சம் வாங்க அனுமதிக்கவும் மாட்டேன். ஆனால், உங்கள் அனைவருக்கும் நேர்மையாக என்னால் பணியாற்ற முடியும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
முன்னதாக ஜூலை மாதத்தில் நாக்பூரில் மகாராஷ்டிரா மாநில ஆசிரியர்கள் குழு கூட்டத்தில் பேசியபோது தனது சொந்த அனுபவம் ஒன்றினைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர், ” சுவரொட்டிகள் ஒட்டுவதன் மூலம், தேர்தல் பரிசுகள் வழங்குவதன் மூலம் பலர் தேர்தலில் வெற்றி பெருகிறார்கள். என்றாலும் இதுபோன்ற வழிமுறைகளில் எனக்கு நம்பிக்கையில்லை. பரிசோதனை முயற்சியாக நான் ஒன்றினைச் செய்தேன். ஒருமுறை தேர்தலின் போது வாக்காளர்களுக்கு ஒரு கிலோ ஆட்டுக்கறி கொடுத்தேன். ஆனால் அந்தத் தேர்தலில் தோற்றுப்போனேன். வாக்களர்கள் மிகவும் புத்திசாலிகள். அவர்கள் எல்லா வேட்பாளர்களிடமிருந்தும் பரிசுப் பொருட்களை வாங்கிக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு சரியானவர்களையே மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் நாக்பூர் தொகுதியில் வெற்றி பெற்றார். அவர் 2019-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதே தொகுதியை தக்கவைத்துக்கொண்டார்.