IND vs ENG Warm Up Match: உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பயிற்சி ஆட்டங்களும் நேற்று முதல் தொடங்கின. நேற்றைய முதல் நாளில் இலங்கை அணியை வங்கதேசமும், பாகிஸ்தான் அணியை நியூசிலாந்தும் வீழ்த்தின. திருவனந்தபுரத்தில் நடைபெற இருந்த தென்னாப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் மழையால் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, இன்றும் இரண்டு பயிற்சி ஆட்டங்கள் திட்டமிடப்பட்டன. இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி கௌகாத்தியிலும், ஆஸ்திரேலியா – நெதர்லாந்து அணிகள் திருவனந்தபுரத்திலும் மோத இருந்தன. இந்நிலையில், நேற்று போலவே இவ்விரண்டு மைதானங்களிலும் இன்றும் மழை பெய்தது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் டாஸை வென்றாலும் டாஸிற்கு பின் மழை பெய்ய தொடங்கியது. இதனால், ஒருபந்து கூட வீசப்படவில்லை. மற்றொரு ஆஸ்திரேலியா – நெதர்லாந்து போட்டியில் டாஸ் கூட வீசப்படவில்லை, அந்த அளவிற்கு மழை பெய்து வந்தது. குறிப்பாக, ஆஸ்திரேலிய வீரர்கள் ஹோட்டலிலேயே இருந்தனர், மைதானத்திற்கு வரவேயில்லை.
இந்நிலையில், சுமார் மாலை 5.30 மணியளவிலும் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், போட்டியை காண வந்த பார்வையாளர்களும், வார இறுதியில் இந்தியா – இங்கிலாந்து போட்டியை எதிர்நோக்கி காத்திருந்த ரசிகர்களும் கடுமையான ஏமாற்றத்திற்கு உள்ளாகினர்.
இது ஒருபுறம் இருக்க, திருவனந்தபுரத்தில் மழை நின்றதால் மைதான பராமரிப்பாளர் ஆடுகளத்தை போட்டிக்கு தயாராக்கினர். இதனால், போட்டி தலா 23 ஓவர்களாக குறைக்கப்பட்டது. சுமார் மாலை 5.30 மணியளவில் ஆஸ்திரேலிய அணியினரும் மைதானத்திற்கு வந்தடைந்தனர். மாலை 6.45 மணியளவில் டாஸ் போடப்பட்டது. ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் டாஸ் வென்று, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
Update from Guwahati
The warm-up match between India and England has been abandoned due to persistent rain. #TeamIndia | #CWC23 | #INDvENG pic.twitter.com/yl7gcJ8ouf
— BCCI (@BCCI) September 30, 2023
இந்தியா – இங்கிலாந்து போட்டியை தவறவிட்டாலும் இந்த போட்டி நடைபெறுவது சற்று ஆறுதலான விஷயமாக ரசிகர்கள் கருதுகின்றனர். இருப்பினும், மழை காலத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஐசிசி உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுவது வருத்தம் அளிக்கும் விதமாக உள்ளது என கருத்துகள் எழுகின்றது. கடந்த 2011ஆம் ஆண்டில் இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் இணைந்து நடத்திய ஐசிசி உலகக் கோப்பை பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் தொடக்கம் வரை நடைபெற்றது. ஆனால், தற்போது அக்டோபர் – நவம்பர் என இந்தியாவின் பல்வேறு நகரங்களில் அது மழை காலம் ஆகும். எனவே, இந்த நேரத்தில் இத்தகைய பெரிய தொடரை நடத்துவது கேலிக்குள்ளாகி வருகிறது.
இங்கிலாந்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரிலும் பல போட்டிகள் மழையினால் பாதிக்கப்பட்டன. அதேபோலவே, இந்த உலகக் கோப்பையிலும் பல முக்கிய போட்டிகள் பாதிப்பிற்கு உள்ளாகுமோ என ரசிகர்கள் சந்தேக கேள்வியை எழுப்புகின்றனர். அதற்கு சான்றாக, பயிற்சி போட்டியிலும் இங்கிலாந்து – இந்தியா போட்டிகள் போன்ற மழையால் ரத்தாவது இந்த கவலையை மேலும் வலுதாக்குகிறது எனலாம். இந்த உலகக் கோப்பை தொடரை வருண பகவான் பிரச்னையில்லாமல் நடத்தவிடுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.