மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் வீட்டுக்குள் 500 பேர் கொண்ட கும்பல் நுழைய முயற்சி

இம்பால்: மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் வசிக்கும் வீட்டை 500 முதல் 600 பேர் கொண்ட கும்பல் முற்றுகையிட்டு வீட்டுக்குள் நுழைய முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் விரட்டப்பட்டனர்.

மணிப்பூரில் மாதக்கணக்கில் மைத்தேயி, குகி இனத்தவர் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த கலவர சம்பவங்களால் இதுவரை அங்கு 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். மேலும் ஏராளமான பேர் வீடுகளை விட்டு வெளியே அரசு அமைத்துள்ள நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.

இந்த கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதற்காக முதல்வர் பிரேன் சிங்குக்கு தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில் இம்பாலில் உள்ள அவரது பூர்வீக வீட்டை நோக்கி சுமார் 500 முதல் 600 பேர் கொண்ட கும்பல் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் திரண்டு வந்தது. வீட்டுக்கு அருகே வந்த அவர்கள் வீட்டை முற்றுகையிட முயற்சி செய்தனர். இதையடுத்து அவர்களை, சுமார் 100 மீட்டர் தூரத்திலேயே அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீஸார் தடுத்து நிறுத்தினர். ஆனால் போலீஸாரையும் மீறிமுதல்வரின் வீட்டுக்குள் நுழைந்து தாக்குவதற்கு அவர்கள் முயன்றனர்.

இதையடுத்து போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி திரும்பிச் செல்லுமாறு விரட்டினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதன் மூலம் முதல்வரின் பூர்வீக வீட்டை தாக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டது.

இம்பாலில் உள்ள அரசு வீட்டில் பிரேன் சிங் தங்கியிருப்பதால், அவரது பூர்வீக வீட்டில் தற்போது யாரும் வசிக்கவில்லை. இருப்பினும் மாநிலத்தில் கலவரம் நீடிப்பதால் அந்த வீட்டுக்கும் பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.