புதுடெல்லி / பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டதை கண்டித்து கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த சூழலில் காவிரி மேலாண்மை ஆணையம் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது.
தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பின் சார்பில் கர்நாடகாவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக பெங்களூரு, மைசூரு, மண்டியா, ராம்நகர், கோலார் ஆகிய 5 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ், கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர்கள் பெங்களூருவில் டவுன் ஹாலில் தொடங்கி சுதந்திர பூங்கா வரை பேரணி நடத்தினர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவ பொம்மையை எரிக்க முயன்றதால் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
குறைவான பயணிகள் முன்பதிவு செய்திருந்ததால் பெங்களூரு வழியாக செயல்படும் 44 விமானங்களின் சேவை நேற்று ரத்து செய்யப்பட்டது. கர்நாடக திரைப்பட வர்த்தக சபை சார்பில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகம் – கர்நாடகா இடையேயான போக்குவரத்து முழுவதுமாக பாதிக்கப்பட்டது.
3000 கன அடி நீர் திறக்க உத்தரவு: டெல்லியில் நேற்று காவிரி மேலாண்மை ஆணையக் குழு கூட்டம் நடைபெற்றது. குழுவின் தலைவர் எஸ்.கே.ஹல்தர், தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன், கர்நாடக நீர்வளத்துறை செயலாளர் ராகேஷ் சிங் மற்றும் கேரள, புதுச்சேரி அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழகம் மற்றும் கர்நாடக அதிகாரிகளுக்கு இடையே நீர் பங்கீடு தொடர்பாக கடுமையான வாதம் நடைபெற்றது. இறுதியில் பேசிய காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர், ‘‘காவிரியில் தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 3,000 கனஅடி நீர் கர்நாடக அரசு திறக்க வேண்டும். அக்டோபர் 15-ம் தேதி வரை பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் 3 ஆயிரம் கன அடி நீர் செல்வதை கர்நாடகா உறுதிப்படுத்த வேண்டும்” என உத்தரவிட்டார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா மூத்த அமைச்சர்களுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர் சித்தராமையா கூறும்போது, ”காவிரி நீரை தமிழகத்துக்கு திறக்க முடியாது என்பது எங்களது நிலைப்பாடாக உள்ளது. இதுகுறித்து ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள், நீர்வளத்துறை நிபுணர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன். நீர் திறக்காமல் இருந்தால் கர்நாடகாவில் ஆட்சி கலைக்கப்படுமா? மத்திய அரசு ராணுவத்தை அனுப்பி கர்நாடக அணைகளை கைப்பற்றி நீரை திறந்துவிடுமா? வேறு எந்த மாதிரியான நடவடிக்கை எங்கள் மீது பாயும் என்பன குறித்து விரிவாக ஆலோசிக்க இருக்கிறேன்” என்றார்.