ICC World Cup 2023, Rohit Sharma: உலகக் கோப்பை தொடரின் (ICC World Cup 2023) லீக் போட்டிகள் வரும் அக். 5ஆம் தேதி முதல் தொடங்குகிறது. 10 அணிகள் மோதும் இந்த தொடர், 10 வெவ்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. ரவுண்ட் ராபின் முறையில் ஒவ்வொரு அணியும் மற்ற 9 அணிகளுடன் ஒரு முறை மோதும். லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த அணி அரையிறுதிக்கு செல்லும். வரும் நவ. 19ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.
ரத்தான பயிற்சி ஆட்டங்கள்
பயிற்சி ஆட்டங்கள் (ICC World Cup Warmup Match) நேற்று தொடங்கிய நிலையில், இன்று இரண்டு போட்டிகள் திட்டமிடப்பட்டன. இரண்டு போட்டிகளும் மழையால் கடைவிடப்பட்டன. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி ஒரு பந்துக் கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. ஆஸ்திரேலியா – நெதர்லாந்து (AUS vs NED Warmup Match) அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஓவர்கள் 23 ஆக குறைக்கப்பட்டது.
இதில், ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்து 166 ரன்களை குவித்தது. ஸ்மித் அரைசதம் அடித்தார். தொடர்ந்து, களமிறங்கிய நெதர்லாந்து அணியில் வான் டெர் மெர்வி, பாஸ் டீ லீடே, லோகன் வான் பீக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதை தொடர்ந்து, பந்துவீசிய ஆஸ்திரேலியா நெதர்லாந்தின் மீது கடுமையான தாக்குதலை தொடுத்தது எனலாம். முதல் ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் ஸ்டார்க் அடுத்தடுத்து விக்கெட் வீழ்த்தினார். மேலும், மூன்றாவது ஓவரை வீசிய ஸ்டார்க் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்தது, ஹாட்ரிக்கை பதிவு செய்தார்.
இதையடுத்து, அடுத்தடுத்து விக்கெட்டுகளை விட்டாலும், காலின் ஆக்கர்மேன் நிலைத்து நின்று ஆடிவந்தார். இருப்பினும் 14.2 ஓவர்களில் மழை குறுக்கிட ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் முடிவின்றி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நெதர்லாந்து அணி 14.2 ஓவர்களில் 84 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ரோஹித்னா பயம்
இது ஒருபுறம் இருக்க ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சாளரும், உலகக் கோப்பை அணியில் இடம்பெறாதவருமான ஜை ரிச்சர்ட்சன் (27), ரோஹித் சர்மா (Rohit Sharma) குறித்து பேசிய கருத்து தற்போது கவனம் பெற்றுள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரிச்சர்ட்சன்,”ரோஹித் சர்மா ஒரு சிறந்த பேட்ஸ்மேன். நீங்கள் ரோஹித்திற்கு பந்துவீசி, அந்த ஓவர் மெய்டன் ஆக போனால், உங்களை ஒரு சிறந்த வீரராகக் கருதக் கூடாது. அடுத்த ஓவரை நீங்கள் வீசும்போது, அவர் 20 ரன்கள் எடுப்பார்” என அவரின் திறனை புகழ்ந்துள்ளார். ரிசர்ட்சன் (Jhye Richardson) கடைசியாக கடந்தாண்டு ஜூன் மாதம் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் விளையாடினார்.
முதல் போட்டியே…
இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் கடந்த வாரம் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதின. இதில், இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றிருந்தாலும், ஆஸ்திரேலியா கடைசி போட்டியில் விளையாடிய விதம் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது எனலாம். இரு அணிகளும் உலகக் கோப்பையில் தங்களின் முதல் போட்டியிலேயே மோதிக்கொள்ள உள்ளனர். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி வரும் அக். 8ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.