வலிகளை கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி வைக்கும் விஜய் ஆண்டனி
இசை அமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகங்கள் கொண்டவர் விஜய் ஆண்டனி. இவரது மூத்த மகள் மீரா ஆண்டனி மன அழுத்தம் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் அவர் நடித்து முடித்துள்ள 'ரத்தம்' என்கிற படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது.
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் நந்திதா, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன் ஆகியோரும் நடித்துள்ளனர். வருகிற 6ம் தேதி படம் வெளிவருகிறது. இதை தொடர்ந்து படத்தின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி தனது இளைய மகள் சாராவுடன் கலந்து கொண்டார். சாராவை மேடையில் தனது அருகிலும் உட்கார வைத்துக் கொண்டார்.
நிகழ்ச்சியில் இயக்குனர் அமுதன் பேசும்போது, ‛‛எனது தந்தை இறந்தபோது என் வீட்டுக்கு வந்த ஒரே சினிமாகாரர் விஜய் ஆண்டனி தான் அப்போது அவர் எனக்கு தைரியமாக இருங்கள் நாங்கள் உங்களோடு இருக்கிறோம் என்றார். இன்றைக்கு அதை நான் அவருக்கு திருப்பிச் சொல்கிறேன். நாங்கள் உங்களோடு இருக்கிறோம்” என்றார்.
பின்னர் பேசிய விஜய் ஆண்டனி “ரத்தம் கதையை படித்ததும் பிடித்துப்போனது. குற்றங்களை புலனாய்வு செய்யும் நிருபராக நடித்து இருக்கிறேன். யாரும் எதிர்பாராத கோணத்தில் படம் இருக்கும், சமூக விஷயம் மற்றும் அரசியல் விஷயங்களும் படத்தில் உள்ளது. இது ஒரு வெற்றிப்படமாக அமையும். இயக்குனர் அமுதன் எனது இசை ஆசிரியரின் மகன். அவருடன் நான் படம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு 10 வருடங்களுக்கு பிறகு அது நிறைவேறி இருக்கிறது'' என்றார்.
மகள் மறைவு குறித்தோ, இளைய மகளை அழைத்து வந்திருப்பதை பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை. மூத்த மகளை இழந்த அந்த வலியை இளைய மகளின் மூலம் அவர் இறக்கி வைக்க முயற்சிக்கிறார் என்கிறார்கள்.