சென்னை: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடல், காவல் துறை மரியாதையுடன் சென்னையில் நேற்று தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முன்னாள் முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
பசுமைப் புரட்சியின் தந்தை என்று போற்றப்படும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் (98), கும்பகோணத்தில் 1925-ல் பிறந்தவர். 1960-களில் இந்தியாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது, பசுமைப் புரட்சியை முன்னின்று நடத்தினார். கோதுமை உற்பத்தி அதிகரிப்பிலும், புதிய நெல் வகைகளை அறிமுகப்படுத்தி, நெல் விளைச்சலில் இந்தியா தன்னிறைவு அடைந்ததிலும் இவரது பங்கு மகத்தானது.
இந்திய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு பொறுப்புகளை வகித்த எம்.எஸ்.சுவாமிநாதன், பத்ம விபூஷன் உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும், 38 பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளன. இவர் சென்னை தரமணியில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவியுள்ளார்.
வயது முதிர்வு காரணமாக தேனாம்பேட்டை ரத்னா நகரில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த 28-ம் தேதி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார். தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை அரங்கில், கடந்த 2 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றுமுன்தினம் அஞ்சலி செலுத்தினார். அதேபோல, வேளாண் விஞ்ஞானிகள், கட்சித் தலைவர்கள், அதிகாரிகள், மகளிர் சுயஉதவிக் குழுவினர், உழவர் உற்பத்தியாளர் குழுவினர், பழங்குடியின மக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகர் கே.விஜயகுமார், கேரள வேளாண் துறை அமைச்சர் பி.பிரசாத், மின்சாரத் துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி, தெலங்கானா மாநில வேளாண் துறை அமைச்சர் நரேந்திர ரெட்டி, கேரள காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ், கேரள திட்டக் குழுத் தலைவர் வி.கே.ராமச்சந்திரன், ‘இந்து’ என்.ராம், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் சுவாமிநாதன் உடலுக்கு நேற்று அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, நேற்று காலை 11.30 மணி அளவில் தரமணியில் இருந்து சுவாமிநாதனின் உடல் காவல் துறை அணிவகுப்பு மரியாதையுடன் பெசன்ட் நகர் மயானத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. வழிநெடுகிலும் பொதுமக்கள் திரண்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
பெசன்ட் நகர் மயானத்தில் 30 குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதையுடன் சுவாமிநாதன் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு, அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.